Dr. Anbumani Ramadoss M.B.,B.S., No.10, Thilak Street, T. Nagar

Former Union Minister for Health & Family Welfare Chennai – 600 017, Tamilnadu

Phone: 044-2834 6464

நாள்: 20-09-2013

புகை பழக்கம் இல்லாத எதிர்காலத்தை

உருவாக்க உறுதியேற்போம்!

புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு உதவும் ‘புகைபிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!’ நூல் ஒரு காலத்திற்கேற்ற தேவை ஆகும். பீடி, சிகரெட், குட்கா, கைனி உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மிகக்கொடிய நச்சுப் பொருட்களாகும். இவற்றில் 4000 கொடிய நச்சு வேதிப்பொருட்கள் உள்ளன.

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர் இரண்டு பேரில் ஒருவர் வீதம் கொடிய நோயால் தாக்கப்பட்டு உரிய வயதாகும் முன்பே பலியாவார்’ என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியா முழுவதும் சுமார் 30 கோடி பேர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

உலக அளவில் ஆண்டுக்கும் 60 லட்சம் பேரையும்,இந்தியாவில் 12 லட்சம் பேரையும் கொலை செய்யும் உலகின் மிகப்பெரிய கொலைகாரனாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். அதாவது இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 136 பேர் புகையிலையால் இறக்கின்றனர். ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு பேர் அநியாயமாய் புகையிலையால் மாண்டு போகின்றனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ‘ புகையிலையால் இறப்போர் எண்ணிக்கை 2020 வாக்கில் உலகளவில் ஆண்டுக்கு 80 லட்சம் பேராகவும், இந்தியாவில் 15 லட்சம் பேராகவும் அதிகரிக்கும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார அமைப்பு தமிழ்நாட்டில் நடத்திய கணக்கெடுப்பில் பள்ளிக்குழந்தைகள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் 2000-2009 ஆகிய பத்தே ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது மிக மிக ஆபத்தான போக்காகும்.

நான் இந்திய சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் புகையிலைத் தீமையை ஒழித்துக்கட்டுவதில் உலகிற்கே வழிகாட்டியாக இந்திய அரசு செயல்பட்டது. பொது இடங்களில் புகைப்பிடிப்பது சட்டவிரோதமாக ஆக்கப்பட்டது. சிகரெட், குட்கா, பீடி உள்ளிட்ட அனைத்து புகையிலைப் பொருட்களின் உறைகள் மீதும் அவற்றின் கொடுமையான கேடுகளை விளக்கும் எச்சரிக்கை படங்களை வெளியிட வேண்டும் என்ற விதி செயல்பாட்டுக்கு வந்தது.

சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகையிலைப் பொருட்களோ, புகைபிடிக்கும் காட்சியோ இடம்பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திரைப்படம் தொடங்குவதற்கு முன்னர் எச்சரிக்கை படக்காட்சி, எச்சரிக்கை விளம்பரம், புகைப்பிடிக்கும் காட்சி வரும்போதெல்லாம் எச்சரிக்கை வாசகம் என எல்லாவிதமான கட்டுப்பாடுகளும் அப்போது உருவாக்கப்பட்டன. உலகிலேயே சினிமா காட்சிகளில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்தும் ஒரே நாடு என்ற சிறப்பினை இந்தியா பெற்றது.

குட்கா-பான்மசாலா தடை செய்யப்பட வழிசெய்யப்பட்டது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் – உணவுபொருட்களில் புகையிலை இருக்கக் கூடாது என்கிற திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் குட்காவுக்கு தடை ஏற்பட்டது. ‘தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம்’ எனும் ஒரு சிறப்புத் திட்டம் வடிவமைத்து செயல்படுத்தபட்டது.

இப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு இந்திய அளவில் புகையிலை ஒழிப்பு வேகமாக முன்னெடுக்கப்பட்டது. அதற்கேற்ற புகையிலைப் பொருட்கள் விற்பனையும் பயன்பாடும் கணிசமாக குறைந்துள்ளது. அதாவது, அதனால் ஏற்படும் அழிவின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முழுமூச்சில் செயல்படுத்தப்பட்டால் – இந்தியாவிலிருந்து புகையிலைப் பொருள் தீமையை பெருமளவு ஒழித்துவிட முடியும்.

ஒரு புறம் புகையிலைப் பொருட்களையும், புகைப்பிடிப்பதையும் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், மறுபுறத்தில் ஏற்கனவே புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்களை மீட்டெடுக்க வேண்டியது மிக முக்கியமான தேவை ஆகும். புகையிலை அடிமைகளை மீட்பதற்கான அறிவியல் பூர்வமான மீட்பு மையங்கள் (Tobacco Cessation Clinics) பெருமளவு தொடங்கப்பட வேண்டும். மேலை நாடுகளில் புகையிலை மீட்பு மையங்கள் ஊருக்கு ஊர் வைக்கப்பட்டு புகைப்பழக்கத்திற்கு அடிமையானோர் மீட்கப்படுகின்றனர். ஆனால் நம் நாட்டில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே ஒன்றிரண்டு மையங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலை மாற வேண்டும்.

இந்நிலையில் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட விரும்புவோர்க்கு பேருதவியாக இருக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ‘புகைபிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!’ என்கிற இந்த நூல் ஒரு காலத்தின் தேவை ஆகும்.

இந்த நூலின் ஆசிரியர்கள் உளவியல் ஆலோசகர் இராம. கார்த்திக், புகைப்பழக்கத்தை வென்ற அன்வர் ஆகியோரின் பெரும்பணியை பாராட்டுகிறேன். புகைபிடிப்பவர்கள் மட்டுமன்றி, தனது நண்பர்களிலோ, உறவினர்களிலோ புகைபிடிப்போர் உள்ள ஒவ்வொரும் இந்த நூலைப் படித்து பயனடைய வேண்டும்.

புகைப்பழக்கம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க உறுதியேற்போம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book