Global Adult Tobacco Survey (2009) கணக்கெடுப்பு படி, இந்தியாவில் இருக்கும் 85% பேருக்கு புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் என்பது தெரிந்திருக்கிறது. மேலும் பெரும்பான்மையினருக்கு சிகரெட் பிடிப்பதால் பல நோய்கள் ஏற்படும் என்றும் தெரிந்திருக்கிறது. சிகரெட் பிடிப்பவர்கள் யாரும் தான் நோய்வாய்ப்பட்டு தன் உடல் நலனை இழக்க வேண்டும் என நினைப்பதில்லை. ஏதோ ஒரு காரணத்தால் பழகி, விட்டு விட முடியாமல் தவிக்கிறார்கள்.

சிகரெட் பிடிப்பவர்கள் பலரும் “விட்டுவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம் ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை” என்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டவே இந்த நூலை எழுதியிருக்கிறோம். ஓர் உளவியல் ஆலோசகர் மட்டும் இதை எழுதினால், “உங்களுக்கு என்ன தெரியும், படித்து விட்டால், ஆராய்ச்சி செய்து விட்டால் மட்டும் போதுமா? எங்கள் கஷ்டம் உங்களுக்கு தெரியாது” என சிகரெட்டை விட முயற்சிப்பவர்கள் சொல்லலாம் என்பதை கருத்தில் கொண்டு, சிகரெட் பழக்கத்தை பல வருடங்களாக கொண்டு, பின்னர் தன் விடா முயற்சியால் வென்று காட்டிய ஒருவரும் தான் செய்த முயற்சிகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது மிகச்சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து புகை பிடிப்பதை விட்டுவிடுவதற்கான அறிவியல் பூர்வமான முறைகளையும், அனுபவங்களையும் சரியான விகிதத்தில் கலந்து சிகரெட்டே சொல்வது போல அளித்திருக்கிறோம்.

நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இல்லாவிட்டாலும், உங்கள் அன்புக்குரியவர்கள் சிகரெட் பிடிக்கலாம், விட வேண்டும் என முயற்சி செய்யலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக அளித்து அவர்களை சிகரெட்டுக்கு பலியாகாமல் தடுக்க உங்களால் முடியும்.

நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால், இந்த புத்தகத்தை வாங்கியதன் மூலம் சிகரெட்டை வெல்ல ஒரு முக்கியமான படியை எடுத்துவைத்திருக்கிறீர்கள். நீங்கள் வெகு சீக்கிரமாக சிகரெட்டை வென்று, வெற்றிக் கதை சொல்ல உங்களை வாழ்த்துகிறோம். இந்த புத்தகத்தை எப்போதும் கையில் வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டுமானால் ஒரு அட்டை போட்டு கூட வைத்துக்கொள்ளலாம்.

எங்கள் இருவருக்கும் புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கான உளவியல் ஆலோசனைகளை அறிமுகப்படுத்திய அடையாறு கேன்சர் இன்ஸிடிடியூட்-க்கும், மிக முக்கியமாக புற்றுநோய் உளவியல் துறைத்தலைவர் முனைவர். விதுபாலா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த புத்தகத்தை எழுதியதற்கு ஒத்துழைத்த எங்கள் குடும்பத்தினருக்கும், நலம்விரும்பிகளுக்கும் குறிப்பாக திரு. இராம. இராஜேந்திரன் அவர்களுக்கும், அழகாக அச்சிட்டு உங்கள் கைகளில் தவழ வைத்த மணிமேகலை பிரசுரத்தாருக்கும், எங்களது நன்றிகள்! இந்த புத்தகம் மேலும் சிறக்க உங்கள் கருத்துக்களையும், சிகரெட்டை வென்ற உங்களின் வெற்றிக்கதைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். www.facebook.com/quittobaccoccs என்ற ஃபேஸ்புக் முகவரியிலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

­­­­­­­­­­­­­­­

– இராம. கார்த்திக் லெக்ஷ்மணன், உளவியல் ஆலோசகர் – karthik.psychologist@ymail.com

அன்வர், சிகரெட்டை வென்றவர் – gnuanwar@gmail.com

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book