="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

3 ரஜினியும் நானும்!

இப்படிச் சொன்ன சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னை வைத்துத்தான் பல காலம் ஸ்டைல் செய்து கொண்டிருந்தார். பாவம், என்னால் நோய்வாய்ப்பட்டு, பல மாதத் தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரை பார்த்து, அவரைப்போல் ஸ்டைல் செய்ய என்னை பிடித்து உயிர் விட்டவர்கள் ஏராளம், தாராளம்! அவர் இவ்வாறு சொன்ன பின்னாலும், என்னை விட முடியாது பலர் என்னிடம் சிக்கிச் சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை செய்து கொள்ளப் பணமும், பிரார்த்தனை செய்யப் பல இலட்சம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

உங்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா?? உங்களுக்குப் பிரார்த்தனை செய்ய அவ்வளவு பேர் இருக்கிறார்களா?? இல்லை தானே! 

நானும் சூப்பர் ஸ்டார் தான், நடிப்பில் அல்ல! உங்களையெல்லாம் நோய்வாய்ப்பட வைப்பதில்! கொல்வதில்! நல்லா கேட்டுக்கோங்க! நானும் சொல்வேன் “ நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி!”

நான் ஒரு ‘ஸ்லோ பாய்சன்’. உடனடியாகவெல்லாம் யாரையும் கொன்று விட மாட்டேன். அவரவர் ஜீன்களுக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாய் உடல் உறுப்புகளைப் பாதித்துப் பிறகு பல வகையான கேன்சர்கள், ஹார்ட் அட்டாக், டி.பி என வரவைத்துக் கொன்று விடுகிறேன். ஆனால் உங்கள் இந்தியத் திருநாட்டின் ‘சைக்கோ’ கொலைகாரனான என்னை பற்றி யாரும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பதில்லை. போலீஸாக முன்வந்து, என் பெயரில் ஒரு ஃஎப்.ஐ.ஆர். கூடப் போட்டதில்லை. ஓரிருவர் கொல்லப்படும் விபத்துகள் பற்றிக்கூடச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் என்னை பற்றி பெரிதாகப் பேசி ஒரிரு நாட்கள் கூடப் பரபரப்பு ஏற்படுத்தமாட்டார்கள். ஏனெனில் யாருக்கும் தெரியாது நான் தான் அவர்களையெல்லாம் கொல்கிறேன் என்று. அவர்களெல்லாம் இறப்பதற்குக் காரணம் அந்தந்த நோய்களே என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், பாவம் உண்மை தெரியாதவர்கள்!

ஆனால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அப்படியல்ல, நான் வரவழைத்த நோய்கள் காரணமான பாதிக்கப்பட்ட பலர் என்னை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகள் பல பதிவு செய்து, வெற்றி பெற்றுத் தகுந்த இழப்பீடு பெற்றுள்ளார்கள்.

எப்படி இப்படி இவ்வளவு இறப்புகள் நடக்கிறது என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் என்னை உள்ளிழுத்த 10-15 நொடிகளில், என்னில் உள்ள நிக்கோட்டின் நுரையீரலிலிருந்து, இரத்த நாளங்கள் வழியாக மூளைக்கு சென்றடைகிறது. மூளைக்கு சென்றடைந்தவுடன், என்னுள் உள்ள நிக்கோட்டின், அட்ரீனலின் என்னும் ஹார்மோனை சுரக்க வைக்க மூளைக்கு கட்டளையிடுகிறது. அட்ரீனல் சுரப்பி அட்ரீனலின்-ஐ சுரந்து உங்களை ஊக்கப்படுத்துவது போல் உணர வைக்கிறேன்.

பொதுவாக இந்த அட்ரீனலின் பிரச்சனைக் காலங்களில் மட்டும் உங்களை ஊக்கப்படுத்த சுரக்கும் ஹார்மோனாகும். ஆனால் இந்த நிக்கோட்டினானது, அட்ரீனலினை அடிக்கடி சுரக்கவைத்து, உங்கள் இதயத்துடிப்பைக் கூட்டி, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, மூச்சினை வேகப்படுத்தி உங்கள் இரத்தத்தில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையின் அளவை கூட்டி, உங்கள் உடல் செல்களை வழக்கத்தை விட அதிகமாக குளுக்கோஸை இரத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.

இப்படி செய்வதன் மூலம் என்னை உள்ளிழுத்ததால்தான், நீங்கள் நன்றாக உணர்வதாக உங்களை ஏமாற்றுகிறேன். இதன் மூலம் நீங்கள் என்னை பயன்படுத்தினால் மட்டுமே மிக விரைவில் நன்றாக உணர முடியும் என்று உங்களை சிந்திக்க வைக்கிறேன். அதன் மூலம் என்னை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்தி உங்களை என் அடிமையாக்குகிறேன்.

வழக்கத்தை விட அதிகமாக குளுக்கோஸ் இரத்தத்தில் இருப்பதால், பசி என்பது தேவையில்லை என்று மூளைக்கு தகவல் சொல்லப்படுகிறது. மேலும் இதனால் இன்சுலின் சுரப்பது தடைபடுகிறது. இவ்வளவு விஷயங்களும் நடக்க, அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. பசியும் எடுக்காமல், இன்சுலினும் சுரக்காமல், அதிக கலோரிகள் எரிக்கப்படுவதை தவறாக புரிந்து கொண்டுள்ளவர்கள், நான் என்னவோ எடையை குறைக்கிறேன் என்று தம்பட்டம் அடித்துவருகிறார்கள்.

மேலும் அசிட்டைல்குளோனைன், க்ளட்டமேட், என்டார்ஃபின் போன்ற இரசயானங்களை மூளையில் சுரக்கவைக்கிறது என்னுள் உள்ல நிக்கோட்டின். இதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஊக்கத்துடன் செயல்பட ஆற்றல் கிடைப்பதாகவும் போலியாக உங்களை உணரவைக்கிறேன். அது போக என்னுள் இருக்கும் பல நச்சுப் பொருட்களால், சங்கிலித்தொடர் விளைவுகளாக பற்பல நோய்களுக்கு உங்களை ஆளாக்குக்கிறேன். உங்கள் உடல் உறுப்புகளைப் பாதிப்படையச் செய்து வேலை செய்யும் திறனைக் குறைக்கிறேன். என்னை மீண்டும் மீண்டும் வாங்கச்செய்து உங்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற விடமாட்டேன். உங்கள் அருகில் வருபவர்களை என் துர்நாற்றத்தால் விலகி இருக்கச் செய்கிறேன். குழந்தைச்செல்வம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்யும், பல இலட்சங்கள் செலவழித்துச் சிகிச்சை பெறும் ஆண்மகன்கள் பலரின் ஆண்மையை இழக்கச்செய்தது நான்தான்.

என்னைப் பிடித்து இறந்து போனாலாவது பரவாயில்லை எனலாம். என்னை பிடித்துக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த காரணத்தால் நான் பலரைக் கொன்று வருகிறேன். இவ்வாறு என்னால் கொல்லப்பட்டவர்கள் பலர் அப்பாவிப் பெண்கள் மற்றும் குழந்தைகள். என்னை பிடிப்பவர்களின் நுரையீரல் வேண்டவே வேண்டாம் என வெளியே தள்ளிய நச்சு வாயுவைச் சுவாசித்து, நுரையீரல் கேன்சரால் பல பெண்கள் இறந்து போனார்கள். ஆம்னியாட்டிக் ஃபுளுயிட் எனப்படும் பனிக்குட நீரில் என் நச்சு புகை படிந்து பல குழந்தைகளுக்கு கருவிலேயே கல்லறை கட்டப்பட்டது, மேலும் பல குழந்தைகள் சடன் டெத் சின்ட்ரோம் என்ற பெயரில், பிறந்த சில நாட்களில் காரணம் ஏதும் அறியாது செத்து விழுந்தார்கள்.

எனக்குப் பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் இரக்கம் காட்டத் தெரியாது. நான் ஓர் அரக்கன். என்னை சேர்த்துக்கொண்டவர்களையெல்லாம் கொன்று குவிப்பேன்.

நான் என்ன செய்ய? என் அட்டைப்பெட்டி மேலேயே எழுதிவைக்க அனுமதித்து விட்டேன். நான் ஓர் உயிர்க்கொல்லி என்றும், என்னை பயன்படுத்தினால் கேன்சருக்கு ஆளாவீர்கள் என்றும், படிக்காதவர்களுக்குப் புரிய வேண்டும் என்று கோரமான படங்களைப் போட்டும் சொல்லிவிட்டேன். என்னை வாங்கும் போது அட்டைப்பெட்டியில் உள்ள இந்த வாசகங்களை மக்கள் பார்ப்பதே இல்லை. அட்டைப்பெட்டியாக வாங்காமல் தனித்தனியாக என்னை வாங்குகிறார்கள். அப்படியே அந்த அட்டை பெட்டிகளை பார்த்தாலும், தங்களுக்கு இப்படியெல்லாம் நடக்காது என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு என்னை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். இப்போது ஞாபகப்படுத்துகிறேன்! என்னால் தன் உயிரை மாய்த்துக்கொண்ட பலரும், தனது பொருளாதார முன்னேற்றத்தைக் குறைத்துக் கொண்ட பலரும், தங்கள் மனைவி, குழந்தைகளை எனக்கு உயிர் பலி கொடுத்த பலரும், தங்களது ஆண்மையை இழந்து தவிக்கும் பலரும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆகவே கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யாமல், என்னை விட்டுவிட முடிவு செய்திருக்கும் நீங்கள் அந்த முடிவில் உறுதியாக இருங்கள்.

License

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *