16 மெல்லுங்க.. என்னை வெல்லுங்க…

ஓரேடியாய் நிறுத்த முடியவில்லையெனில், படிப்படியாய் அளவைக் குறைத்து கடைசியில் நிறுத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்றுங்கள். படிப்படியாய் குறைப்பது என்றால் பத்திலிருந்து, ஏழாக, ஐந்தாக, பின்னர் இரண்டாக குறைத்து விட்டுவிடுவது கிடையாது. உங்கள் தலைவர், ரோல் மாடல் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்? சிகரெட் பழக்கம் என்பது பைனரி. 0 அல்லது 1 புகை பிடிப்பவர் அல்லது புகை பிடிக்காதவர். கொஞ்சம் பிடிப்பவர், எப்போதாவது பிடிப்பவர், குறைவாக பிடிப்பவர், அதிகமாக பிடிப்பவர் என்றெல்லாம் கிடையவே கிடையாது.

படிப்படியாய் விட்டு விடுவது எப்படி என்று நான் சொல்லப்போகும், இந்த முறையிலும், நீங்கள் என்னை முழுதாகத்தான் நிறுத்தப்போகிறீர்கள். என்னை விட்டுவிடும் சிகிச்சையின் ஒரு பகுதியாக, உங்களுக்கு போதை கொடுத்து ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்னுள் இருக்கும் நிக்கோடினை 2 மில்லி கிராம் மட்டுமே எடுத்துக்கொள்ள போகிறீர்கள்.

2 மில்லி கிராம் நிக்கோட்டின் ச்சூயிங் கம்மை பரிந்துரை சீட்டு இல்லாமல், நீங்களே மருந்து கடைக்கு சென்று வாங்கிக்கொள்ளலாம். இதனை எப்படி மெல்ல வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே “எனக்கு வாய்த்திருக்கும் அடிமைகள் மிகவும் திறமைசாலிகள், ஆனால்…” என்ற அத்தியாத்தில் சொல்லியிருக்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை சாதாரண ச்சூயிங் கம்மைப் போன்று மென்றீர்களானால், வாய் முதல் தொண்டை வரை எரிச்சல் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுவீர்கள்.

இருதய இரத்த நாள நோய்கள், நீரிழிவு நோய், தைராய்டு, கிட்னி, கல்லீரல் பிரச்சனைகள் போன்றவை இருந்தாலோ அல்லது பெண்களாய் இருந்து கருவுற்றிருந்தாலோ, இதனை பயன்படுத்தும் போதே புகையிலை பொருட்களை எடுத்துக்கொண்டாலோ மருத்துவர் அறிவுரையுடன் மட்டுமே இந்த 2 மில்லி கிராம் ச்சூயிங் கம்மை பயன்படுத்த வேண்டும். 12 வயதுக்கு உட்பட்டவர்கள் இதனை பயன்படுத்தக்கூடாது.

இந்த முறையிலும் முழுமையாய் என்னை நிறுத்த போகும் நாளை குறித்துக்கொண்டு அனைவருக்கும் தெரிவியுங்கள். என்னை விட்டுவிட்ட முதல் 3 நாட்களுக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து இந்த 2 மில்லி கிராம் நிக்கோட்டின் ச்சூயிங்கம்மை எடுத்துக்கொள்ளுங்கள்.

3 நாட்களுக்கு பிறகு நான் ஏற்கனவே கூறியுள்ள 4D வழிமுறைகளை பயன்படுத்துங்கள். முடியவே இல்லையெனில், ஒரு ச்சூயிங் கம்மை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதிலும் 3 மணி நேரத்திற்கு அதிக பட்சம் ஒரு ச்சூயிங் கம்மை மட்டுமே பயன்படுத்தலாம். அதாவது, ஒரு ச்சூயிங் கம்மை வாயில் போட்டு 3 அல்லது 4 முறை நிறுத்தி மென்று விட்டால், அடுத்த 3 மணி நேரத்திற்கு எப்படியாவது கஷ்டப்பட்டு 4D கோட்பாட்டை பயன்படுத்தி என்னை வெல்ல வேண்டும். 3 மணி நேரத்திற்கு பின்தான், அடுத்த ச்சூயிங் கம்மை எடுத்துக்கொள்ளலாம். இப்படி செய்து வந்தால் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 6 ச்சூயிங் கம் தேவைப்படும்.

இதே போன்று 4 மணி நேரத்திற்கு ஒன்று, 5 மணி நேரத்திற்கு ஒன்று என கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து பொதுவாக இவ்வாறு 12 – 18 நாட்களில் இந்த 2 மில்லி கிராம் ச்சூயிங் கம்மையும் உங்களால் நிறுத்தி விட முடியும். என்னை பயன்படுத்திய பலர் இங்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பயன்படுத்தி என்னை வென்றிருக்கிறார்கள்.

வ.எண்

நாள்

எத்தனை மணி நேரத்திற்கு ஒரு ச்சூயிங் கம் எடுத்துக்கொள்ளலாம்

ஒரு நாளைக்கு எடுத்துகொள்ளும் அதிக பட்ச ச்சூயிங் கம்-களின் எண்ணிக்கை

1

முதல் மூன்று நாட்கள் (1-3)

2 மணி நேரத்திற்கு ஒன்று

8-10

2

இரண்டாவது மூன்று நாட்கள் (4-6)

3 மணி நேரத்திற்கு ஒன்று

6

3

மூன்றாவது மூன்று நாட்கள்(7-9)

4 மணி நேரத்திற்கு ஒன்று

4-5

4

நான்காவது மூன்று நாட்கள் (10-12)

5 மணி நேரத்திற்கு ஒன்று

3-4

5

ஐந்தாவது மூன்று நாட்கள் (13-15)

6 மணி நேரத்திற்கு ஒன்று

2-3

6

ஆறாவது மூன்று நாட்கள் (16-18)

8 மணி நேரத்திற்கு ஒன்று

1-2

7

19 வது நாள் முதல்

0

இந்த ச்சூயிங் கம்மை பயன்படுத்தும் போது, உங்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் உடனடியாக ஒரு பொது மருத்துவரை/ பல் மருத்துவரை/ மன நல மருத்துவரை அணுகுங்கள்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள 18 நாட்களுக்குள் என்னை விட்டுவிட முடியாமல் போனால் பரவாயில்லை, குற்ற உணர்வு கொள்ளாதீர்கள். அதிக பட்சம் 12 வாரங்கள் வரை இந்த ச்சூயிங் கம்மை பயன்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து என்னை நீங்கள் விட்டுவிட முடியும். அப்படி முடியாமல் போனாலும் கூட, 4 மில்லி கிராம் நிக்கோட்டின் ச்சூயிங் கம், மன நல மருந்து ஆகியவற்றில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ மனநல மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொண்டு, உளவியல் ஆலோசகரின் உதவியுடன் நீங்கள் என்னை விட்டொழிக்க முடியும். ஆகவே மனம் தளராதீர்கள்!

\

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *