17 மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை

என்னை பயன்படுத்தும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைவது, ஊக்கப்படுத்திக் கொள்ள என்னை பயன்படுத்துவது போன்றவை உண்மையில் மூட நம்பிக்கைகள். அடிப்படையில் என்னுள் இருக்கும் நிக்கோட்டின் உங்களை நன்றாக மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது. தற்காலிகமாக உங்கள் மூளையில் இரசாயன மாற்றங்களை நடக்க வைத்து உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறேன், அதனால் நீங்கள் ஊக்கமடைவது போல உணருகிறீர்கள். உண்மையில் நான் உங்களை ஊக்கம் அடையச்செய்வதில்லை. செயற்கையான, மாயையான உலகில் உங்களை உங்களை வைத்து, உங்களை ஏமாற்றி, உங்கள் உடல் நலனையும், மன நலனையும் கெட வைக்கிறேன். என்னை தொடர்ந்த கால இடைவெளிகளில் பயன்படுத்தினால்தான் சாதாரணமாகக்கூட செயல்பட முடியும் என்ற இழிநிலைக்கு உங்களைத் தள்ளி நன்றாக ஏமாற்றுகிறேன். ஆகவே என்னால் ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் ஏமாறாமல் உண்மையை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

உங்களின் சந்தோஷங்களை கொண்டாட என்னை விடுத்து, வேறு நல்ல வழிகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷத்தை கொண்டாட, என்னை பயன்படுத்துவதற்கு பதிலாக, சாக்லேட், ஐஸ்கீரிம், பிரியாணி என விருப்பப்பட்டவற்றை வாங்கி சாப்பிடுங்கள், மற்றவர்களுக்கும் வாங்கிக்கொடுத்து ‘ட்ரீட்’ வையுங்கள். என்னை பயன்படுத்த தொடங்கும் முன் சிறு வயதில் சந்தோஷங்களை கொண்டாட என்ன செய்தீர்கள் என்று நினைவுபடுத்தி பார்த்து, அவற்றை செய்யுங்கள்.

‘போர்’ (Boar) அடிக்காமல் இருக்க என்னை பயன்படுவதாய் இருந்தால், உங்கள் பொழுதை நல்ல முறையில் போக்க, நாவல், நியூஸ் பேப்பர், வாரப் பத்திரிக்கைகள் போன்றவற்றை படிக்கலாம், டிவியிலோ அல்லது டிவிடி வாங்கியோ உங்கள் அபிமான திரைப்படங்களை பார்க்கலாம். (திருட்டு டிவிடி-யில் அல்ல!) எஃப்.எம் ரேடியோவில் அல்லது உங்கள் ஃபோனில் உங்களை மயக்கும் பாடல்களை பதிவு செய்து கேட்கலாம். உங்கள் நண்பருக்கு/ காதலிக்கு / மனைவிக்கு/ காதலருக்கு/ கணவருக்கு ஃபோன் போட்டு கடலை போடலாம். கம்ப்யூட்டரிலோ அல்லது ஃபோனிலோ கேம் விளையாடலாம். வலைப்பூவில் (Blog) எழுதலாம். புதிதாக ஒரு மொழியை, இசைக்கருவியை கற்றுக்கொள்ளலாம். இப்படி பல நல்ல விஷயங்கள் இருக்கும் போது என்னை பிடித்துக் கொண்டு பொழுதை போக்க வேண்டுமா என்ன? நல்ல விதத்தில் பொழுதை போக்க ஒரு சில வழிமுறைகளை உங்களுக்கு ஏற்றவாறு வகுத்துக்கொள்ளுங்கள்.

தூக்கம் வராமல் இருக்க, வேலையில் வேகம் குறையாமல் இருக்க, கவனம் செலுத்த என்னை பயன்படுத்துகிறேன் என்று நீங்கள் கூறினால், சூடான தண்ணீரை ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொண்டு அவ்வபோது குடித்து வாருங்கள். தூக்கம் வரும்போது முகத்தை கழுவுங்கள். இரண்டு வேறுபட்ட வேலைகளை செய்து, ஒரு வேலையில் வேகம் குறையும்போது, அடுத்த வேலையை செய்து விட்டு முதலில் செய்த வேலைக்கு மீண்டும் வாருங்கள்.

எடை அதிகரிக்காமல் இருக்க/ பசியை கட்டுப்படுத்த என்னை நீங்கள் பயன்படுத்தினால், நன்றாக உங்கள் உடலை ஏமாற்றி, தேவையான அளவு ஊட்டச்சத்தினை உங்களுக்கு தராமல் இருந்திருக்கிறீர்கள் என்று பொருள். பசி என்ற ஒன்றின் மூலம்தான், நீங்கள் செயல்படுவதற்கான பெரும்பாலான சக்தியை உங்கள் உடலும். மனமும் பெறுகின்றன, அப்படிப்பட்ட அத்யாவசியமான பசி இருப்பதை தெரிவிக்க உடல் உங்களுக்கு சமிஞ்சை அதாங்க சிக்னல் அனுப்புகிறது. அந்த சமிஞ்சையை நீங்கள் தவிர்த்து விட்டீர்களானால், பாவம் அது என்ன செய்யும்? ஏற்கனவே எப்படி நான் எடையை கட்டுக்குள் வைக்க உதவி புரிகிறேன் என்று “நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல” என்ற அத்யாயத்தில் சொல்லியிருக்கிறேன்! ஞாபகம் இல்லையென்றால் ஒரு முறை அங்கு சென்று பார்த்துவாருங்கள்.

எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், முறையாக உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா, விளையாட்டு, கராத்தே, குங்ஃபு என எதையாவது ஒன்றை செய்ய வேண்டும். சத்தான சரிவிகித உணவை சாப்பிட வேண்டும். இதெல்லாம் எனக்கு தெரியாது என்றால், ஓர் ஊட்டச்சத்து நிபுணரை அணுகி அவர் அளிக்கும் ஆலோசனைகளை பின்பற்றி வாருங்கள்.

எடை பற்றிய கவலை இல்லாமல் இருந்தாலும் கூட, நீங்கள் உடற்பயிற்சி செய்யலாமே! காலையில்/மாலையில் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலுக்கு நல்லதே! ஏனெனில், என்னிடமுள்ள நிக்கோட்டின் மூலம் போலித்தனமாக உங்கள் மூளையில் சுரக்க வைக்கும் – மகிழ்ச்சி தரும் என்டார்ஃபின் இரசாயனத்தை இயற்கையாக எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாது குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஒவ்வாரு நாளும் செய்யப்படும் உடற்பயிற்சி சுரக்க வைப்பதாக அறிவியல் ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்து, ஒரு நாளும் விட்டுவிடாது முறையாக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்து வாருங்கள். ஜிம்/மைதானத்திற்குதான் போக வேண்டும் என்று இல்லை. நீங்கள் எங்கு இருந்தாலும், உங்களுக்கு பிடித்த, பொருத்தமான ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுங்கள். ஸ்கிப்பிங், நடனம், தண்டால், வீட்டுக்குள்ளேயே 4,5 ரவுண்டுகள் நடப்பது போன்றவற்றை செய்யுங்களேன். மேலும் என்னை ஒழித்துக் கட்டுவதற்கான சிகிச்சையாக உடற்பயிற்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நான் கடுமையாக உழைக்கிறேன். எனக்கு உடற்பயிற்சி தேவையில்லை என்றெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும், உங்கள் எல்லா உடல் பாகங்களுக்கும் நீங்கள் வேலை கொடுத்திருக்க முடியாது. உடற்பயிற்சி என்பது எல்லா உடல் பாகங்களுக்கும் வேலை கொடுப்பது. அதே போல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இதற்காக ஒதுக்கி

செய்ய வேண்டும்.

நான் தினமும் 20 நிமிடம் அலுவலகத்திற்கு நடந்து செல்கிறேன். அது போதாதா என்று நீங்கள் கேட்டால், நிச்சயம் போதாது. ஏனெனில் நீங்கள் நடப்பது அலுவலகத்திற்கு செல்வதற்காகவே ஒழிய உடற்பயிற்சி செய்ய இல்லையே! உடற்பயிற்சி செய்யும் போது, தான் உடற்பயிற்சி செய்கிறோம் என்ற நினைப்பில் செய்ய வேண்டும். அலுவக நினைப்புகளோ அல்லது மற்ற நினைப்புகளோ இருக்கக் கூடாது.

சரி அடுத்த விஷயத்திற்கு வாருங்கள்! என்னை பயன்படுத்துவதால் நீங்கள் பிரபலமாக, எல்லோரையும் கவர்ந்திழுக்க கூடியவராக, எதைப்பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பவராக மற்றவர்களுக்கு தெரிவதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், ‘சார்ரி’ – கிடையவே கிடையாது! உண்மையில் என்னால் உங்கள் இமேஜ் ‘டாமேஜ்’ தான் ஆகும். நீங்கள் பிரபலமாக ஆக வேண்டுமானால், வேறு வழிகள் எவ்வளவோ இருக்கின்றன, அவற்றை விடுத்து என்னை பயன்படுத்துவதால் உங்கள் இமேஜ் உயரும் என நினைத்தால், ‘குறைந்த தன் மதிப்பீடு’ (Low Self Esteem) கொண்டவராக நீங்கள் இருக்கலாம். உங்கள் தன் மதிப்பீட்டை உயர்த்த வேண்டுமானால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற செய்ய வேண்டியவற்றை செய்யத் தொடங்குங்கள். எனக்கு அடிமையாய் இருப்பதே உங்கள் தன்மதிப்பீட்டை முக்கியமாக குறைக்கிறது. ஆகவே என்னை விட்டுவிடுவதைச் செய்தாலே உங்கள் தன்மதிப்பு தானாக உயரும்.

பொதுவாக நல்ல உடைகளை அணிவதும், வாரத்திற்கு குறைந்தது இரு முறை ஷேவிங் செய்வதும், மாதம் ஒரு முறை அழகாக முடி வெட்டி வருவதும், காலையில் சீக்கிரமாய் எழுவதும், முறையாக குளிப்பதும், குறைந்த பட்சம் அரை மணி நேரம் உடற்பயிற்சிகள் செய்வதும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதும், ஞாபகக் குறிப்பு எழுதிவைத்து, சரியாக வேலைகளை செய்து முடிப்பதும், சரியான நேரத்தில் சாப்பிடுவதும், 7-8 மணி நேரம் தூங்குவதும், உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதும், நல்ல புத்தகங்களை படிப்பதும், சான்றோரோடு உரையாடுவதும், மற்றவருக்கு உதவிகள் செய்வதும், புதிய இடங்களுக்கு பயணம் செய்வதும், உங்களுக்கு தெரிந்தவற்றை தேவைப்படுபவர்களுக்கு கற்றுக்கொடுப்பதும், உங்கள் தன் மதீப்பீட்டை உயர்த்தும். எனவே இவற்றில் உங்கள் முடிந்ததைவை, பொருத்தமானவை செய்து உங்கள் தன் மதிப்பீட்டை உயர்த்தி என்னை விட்டொழியுங்கள்.

உங்கள் வாழ்வில் மாற்றமுடியாதவைகள் என்று சில இருக்கும். உங்களது தோலின் நிறம், உயரம், குடும்பத்தினர், உடல் வாகு போன்றவை நீங்கள் மாற்றக்கூடியவை அல்ல. அதே போல் வேறு சில விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். அவை உங்கள் தன்மதீப்பீட்டை குறைக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த விஷயங்களை அப்படியே உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதும், எந்த ஒரு நிபந்தனைகளும் இல்லாது உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதுமே தன்மதீப்பீட்டை உயர்த்துவதற்கான வழி ஆகும். அமைதிப் பிரார்த்தனை என்று சொல்லப்படும் பின்வரும் வாக்கியங்களை தினந்தோறும் காலையில் எழுந்தவுடனும், இரவு தூங்கப் போவதற்கு முன்னும் சொல்லிவாருங்கள்.

“இறைவா! எங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், மாற்றக்கூடியதை மாற்றும் துணிவும், இவற்றை பாகுபடுத்தி அறிய ஞானமும் தந்தருள்வாய்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *