9 நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்….

நீங்கள் என்னை விட்டுவிட வேண்டும் என்ற நினைப்பே உங்களுக்கு இல்லாதது போல் இருக்கிறது. நீங்கள் இன்னுமும் நான் எவ்வளவு பெரிய கொலைகாரன், திருடன் என்று தெரியாமல் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உலகில் ஏற்படும் தடுக்கக்கூடிய அதிக பட்ச இறப்புகளுக்கு காரணமாய் இருப்பது நானும் என் சகோதரர்களும்தான் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நான் இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட பத்து லட்சம் உயிர்களை காவு வாங்குகிறேன். ஒரு நாளைக்கு சராசரியாக 2500 பேர் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், குரல்வளை புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்கள் என்னுடனும், என் சகோதரர்களுடனும் சம்பந்தப்பட்டவை. உங்கள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் கணக்கெடுப்பு படி, கிட்டத்தட்ட 45% புற்றுநோய்கள் என்னாலும், என் சகோதரர்களாலும் ஏற்படுகிறதாம்.

ஆக எங்களால் புற்றுநோய் மருத்துவர்களுக்கு பணி ‘ஓஹோ, ஆஹா’ என்று நடக்கிறது. (எவ்வளவு நாள்தான் ‘ஆஹா, ஓஹோ’ என்று சொல்வது. கொஞ்சம் மாற்றி சொல்லிப் பார்ப்போமே!)

புற்றுநோய் பற்றி பேசும் போது, புற்றுநோய்க்கு பல மணி நேரங்கள் கவனமாக அறுவை சிகிச்சை செய்யும் ஒரு மகத்தான மருத்துவர் என்னைப் பற்றி சொன்ன கதை ஞாபகத்திற்கு வருகிறது. அவரின் முக்கால்வாசி வாழ்க்கை ஆப்பரேஷன் தியேட்டரிலேயே போகிறது என்று சொன்னால் அவர் அதனை மார்தட்டி ஏற்றுக் கொள்வார். சரி கதைக்கு வா என்கிறீர்களா? இதோ வருகிறேன்!

ஒரு வெள்ளம் போகும் ஆற்றின் கரையில் நின்று, ஒரு மருத்துவர் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்த்து கொண்டிருந்தார். அப்போது ‘தொப்’ என ஒருவர் விழுந்து, வெள்ளத்தில் அடித்து செல்வதை பார்த்த மருத்துவர், தானும் வெள்ளத்தில் குதித்து, கஷ்டப்பட்டு நீந்தி அவனை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்து முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். அவனை காப்பாற்றிய அடுத்த நொடியில் மீண்டும் ஒருவர் ‘தொப்’ என வெள்ளத்தினுள் விழும் சத்தம் கேட்கிறது. மீண்டும் ஓடிப்போய் கஷ்டப்பட்டு இரண்டாவதாக விழுந்த அவரையும் காப்பாற்றுகிறார். தற்போது காப்பாற்றப்பட்டவருக்கு முதலுதவி செய்து கொண்டிருக்கும் போதே மூன்றாவதாக இன்னொருவர் வெள்ளத்தில் விழுகிறார். வெள்ளத்தில் விழுந்த அந்த நபரை காப்பாற்ற இந்த மருத்துவர் ஓடுகிறார். இப்படி ஒவ்வொருவராக வெள்ளத்தில் விழ விழ மருத்துவர் காப்பாற்றுகிறார். ‘ஏன் இவ்வாறு ஒவ்வொருவராக வெள்ளத்திற்குள் விழுகிறார்கள்?’ என்று யோசித்த மருத்துவர் கொஞ்ச தூரம் சென்று பார்த்தால், அங்கு ஒருவன் வரிசையாக பலரை நிற்க வைத்து, ஒவ்வொருவராக வெள்ளத்திற்குள் தள்ளி விட்டு கொண்டிருக்கிறான். தள்ளி விட்டவன் பெரிய பயில்வானாக இருக்கிறான்.

மருத்துவருக்கோ ‘அவனைப் போய் தடுத்துவிடலாமா? பெரிய பயில்வானாக இருக்கிறானே! அவனை எதிர்த்து நிற்க முடியுமா?’ என்ற கேள்விகள் எழுந்தது. ஆனால் தன்னால் முடிந்தது வெள்ளத்திற்குள் விழுபவர்களை காப்பாற்றுவது மட்டும்தான், தனக்கு அந்த திறமை மட்டும்தான் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து, அதை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

ஒரு தருணத்தில், எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சரி அவனிடம் போய் “ஏன் இப்படி செய்கிறீர்கள் சார்?” என்று மிகப் பணிவாக கேட்டார். அதற்கு அவன் “இவர்கள் அனைவரும் என் அடிமைகள், அவர்களை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் ஒரு கொலைகாரன் என்றும், நோய்களை தருபவன் என்றும் பல முறை தெரியப்படுத்திய பிறகும், என்னை விட்டு ஓடி விடுங்கள் என எச்சரிக்கைகள் பல செய்தும் அவர்கள் என் அடிமைகளாகவே இருந்தார்கள். இப்போது அவர்களை கொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றியது, அதனால் வெள்ளத்தினுள் தள்ளி விட்டு கொண்டிருக்கிறேன், முடிந்தால் காப்பாற்றிக்கொள்!” என்று கூறினானாம் அந்த கொலைகாரப் பாவி!

இந்த கதையில், வெள்ளத்திற்குள் தள்ளி விட்டு அவர்களை கொலை செய்வது யாரென்றால் அது நான்தான். மருத்துவரால் என்ன செய்ய முடியும்? அவருக்கு என்னால் நோய்வாய் பட்டவரை காப்பாற்றத்தான் முடியும். “ஐயோ! இப்படி செத்து செத்து விழுகிறார்களே!, என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே!” என்று அவர் அங்கலாய்த்தால், ஒன்றும் நடக்காது.

என்னை பயன்படுத்துபவர்கள், என்னை தானாக நிறுத்திவிட்டால் ஒழிய, மருத்துவரோ, அரசோ, தொண்டு நிறுவனங்களோ, மற்ற எவருமோ என்னை வந்து ஒன்றும் செய்ய முடியாது.

பலர் நினைத்துக்கொள்கிறார்கள், என்னை பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமே வருமென்று! இன்னும் பல நோய்கள் இருக்கின்றன! உங்கள் நாட்டில் ஏற்படும் கிட்டத்தட்ட 40% காசநோய் இறப்புகளுக்கு, நான்தான் காரணம் என்று கூற ஆதாரங்கள் உண்டு. காச நோய் ஏற்படுத்தும் கிருமியை அழிக்க எவ்வளவு நல்ல சிகிச்சை இருந்தாலும், என்னை பயன்படுத்துவதால், நான் அந்த சிகிச்சைகளை செயலிழக்க செய்கிறேன். என்னை என்ன செய்வது என்று அறியாமல், காசநோய்க்கு சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் திணறிவருகிறார்கள்.

நானே பல வகையான இருதய-இரத்த நாள நோய்களுக்கு காரணமாய் இருக்கிறேன். மாரடைப்பு/நெஞ்சு வலி, பக்கவாதம், கால் விளிம்புகள் அழுகிப்போதல், சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தம் குறைந்து போதல், நுரையீரல் சரியாக வேலை செய்யாமை போன்ற பல நோய்கள் என் தான தர்மங்கள்.

2020ம் ஆண்டில், இருதய-இரத்த நாள நோய்களால் உங்கள் நாட்டில் ஏற்படப்போகும் 42% இறப்புகளுக்கு நானும், என் சகோதரர்களுமே காரணமாய் இருக்கப்போகிறோம் என்று ஒர் ஆராய்ச்சி கணக்கிட்டுள்ளது.

என்னை பயன்படுத்துவதால் மட்டுமே இந்தியாவில் ஏற்படும் 82% நீடித்த சுவாச கோளாறு நோய்கள் (COPD) ஏற்படுகின்றன.

இதைச் சொன்னாலாவது, பயப்படுகிறீர்களா என்று பார்ப்போம்! என்னை பயன்படுத்தும் ஆண்களின் விந்தணுக்கள் குறைவாக இருப்பதையும், அவர்களின் விந்தணுக்களின் தரமும் குறைவாக இருப்பதும் பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்னை பயன்படுத்தி விட்டு பிறகு குழந்தைச் செல்வம் வேண்டும் என பல ஆண்கள் அங்கலாய்ப்பதை நான் நக்கலாக பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் ஆண் உறுப்புக்கு இரத்தம் செல்லாது ஏற்படும் ஆண்மைக்குறைவு என்னால் ஏற்படுத்தப்படும் நோய்களுள் ஒன்று!

என்னையும், என் சகோதரர்களையும் பயன்படுத்தும் தாய்மார்கள், கர்ப்பமாய் இருக்கும் போதும், பிரசவத்தின் போதும், பிரசவித்து 7 நாட்களுக்குள்ளும் அவர்களின் குழந்தைகள் 57% இறந்து போவதாக ஓர் ஆராய்ச்சி கூறுகிறது.

உங்களுக்கு உங்கள் மேல்தான் அக்கறை இல்லை என்றாலும் கூட, உங்கள் மனைவி மீதும், குழந்தைகள் மீதுமா அக்கறை இல்லை? பாருங்கள் அவர்கள் என் அருகில் இருந்தால், என்ன செய்கிறேன் என்று!

அடுத்தவர் என்னை பயன்படுத்தும் போது, அருகில் இருக்கும் கர்ப்பிணி தாய்மார்களின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எடை குறைவாக பிறப்பதற்கும், தகுந்த முதிர்ச்சி அடையாமல் பிறப்பதற்கும் அதிக அளவு வாய்ப்புள்ளது. உங்கள் தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அடுத்தவர் புகைபிடிக்கும் போது அருகில் இருக்கும் கர்ப்பிணிகள் பிரசவிக்கும் குழந்தைகளின் எடை, அவ்வாறு இல்லாத கர்ப்பிணிகள் பிரசவிக்கும் குழந்தைகளின் எடையை விட சராசரியாக 63 கிராம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி எடை குறைந்து, தகுந்த முதிர்ச்சி அடையாமல் பிறக்கும் குழந்தைகள் கொஞ்ச நாட்களில் இறந்துவிடவும் வாய்ப்புகள் உண்டு.

உங்களின் ‘பர்சனாலிட்டியை’ காண்பிக்கும் உங்கள் புன்சிரிப்புக்கு காரணமாக இருக்கும் உங்கள் பற்களை என்ன செய்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்!

என்னை பயன்படுத்தினால், எவ்வளவு நல்ல பிரஷ்ஷால் பல் தேய்த்தாலும், உங்கள் பற்களில் கறை ஏற்படத்தான் செய்யும். எவ்வளவு உயர் தரமான சோப்பு போட்டு தேய்த்தாலும், உதட்டின் நிறம் மாறத்தான் செய்யும். பெண்களை ஈர்ப்பதாக விளம்பரம் செய்யப்படும் வெளிநாட்டு ஸ்பேரேக்களை அடித்தாலும், ‘மவுத் ஃபிரஷ்னர்” பயன்படுத்தினாலும், உங்கள் அருகில் வந்தால் ‘குப்’ என துர்நாற்றம் அடிக்கத்தான் செய்யும். உங்கள் அருகில் நீங்கள் எப்போதுமே இருப்பதால், உங்களுக்கு வேண்டுமானால் பழகிப்போய் அந்த துற்நாற்றம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எப்படியும் மற்றவர்களுக்கு தெரிந்துவிடும்.

மேலும் வாய்க்குழியில், பற்களில் ஏற்படும் பிரச்சனைகள் பலவற்றிற்கும், நானும் என் சகோதரர்களும் காரணமாய் இருப்பது பலரும் அறிந்திராதது. லூக்கோபிளேக்கியா எனும் வெள்ளைத்திட்டுக்கள் நோயையும், எரித்திரோபிளேக்கியா எனும் சிகப்புத்திட்டுக்கள் நோயையும் ஏற்படுகின்றன. இந்த இரண்டு பிரச்சனைகளும் கவனிக்கப்படாது விட்டால், வாய் புற்றுநோய்க்கு வழிவகுத்து விடும். ஆகவே தான் இந்த இரு பிரச்சனைகளையும், புற்றுநோய்க்கு முந்தய நிலைகள் என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகின்றன. அதிகமாக இளைஞர்களில் காணப்படும் ஓரல் சப்மியூக்கஸ் ஃபைப்ராஸிஸ் எனப்படும் வாய் திறக்க முடியா நிலையும் என்னாலும் என் சகோதரர்களாலும் ஏற்படுவதே.

பற்களில் ஏற்படும் நோய்களுக்கெல்லாம் என்னதான் சிகிச்சை செய்தாலும், என்னை பயன்படுத்தியதால், அந்த சிகிச்சைகளை ஒழுங்காக வேலை செய்ய விடமாட்டேன். இது போக என்னை பயன்படுத்துவதால், சர்க்கரை நோய் என சொல்லப்படும் நீரிழிவு நோய் எளிதில் ஏற்படும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். இன்னும் பற்பல ஆராய்ச்சிகளில், பற்பல நோய்களுடன் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.

நானே எமனின் தூதுவன்! பற்பல வடிவங்களில் உங்களைக் கொல்ல காத்திருக்கிறேன்! கொல்ல முடியாமல் போனாலும், உங்கள் வாழ்க்கைத்தரத்தையும், ஆயுட்காலத்தையும் என்னால் முடிந்த வகைகளிலெல்லாம், வெவ்வேறு நோய்களின் பெயரைச் சொல்லி பாதிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறேன், ஜாக்கிரதை! பிற்சேர்க்கை-1 ல் என்னைப்பற்றி பரவலாக இருக்கும் தவறான கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை படித்து தெளிவு பெறுங்கள்.

இதுவரை என் கெட்டகுணத்தை காட்டிவிட்டேன். ஆனால் நீங்கள் என்னை விட்டுவிட துணிந்து விட்டால், உங்கள் உடலிலும், மனதிலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். அவற்றை நான் எந்த வகையிலும் தடுக்க மாட்டேன். இது என் நல்ல குணம். என்னை விட்டுவிட்ட முதல் 20 நிமிடங்களிலேயே உங்கள் உடலில் நல்லவைகள் நடக்க ஆரம்பித்து விடும்.

நிறுத்திய முதல் 20 நிமிடங்களில் இரத்த அழுத்தம், நாடி துடிப்பு, கை கால்களில் வெப்பநிலை ஆகியவை இயல்பு நிலைக்கு திரும்புகின்றன
12 மணி நேரத்தில் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு இயல்பு நிலைக்கு வருகிறது, கார்பன் மோனாக்ஸைடு குறைந்து போகிறது
48 மணி நேரத்தில் நரம்புகள் விளிம்புகள், மணம், சுவை உணர்வுகள் போன்றவை இயல்பு நிலைக்கு திரும்புகின்றன
3 மாதங்களில் நுரையீரலின் செயல்திறன் அதிகரிக்கிறது, இருமல்,சைனஸ், அலுப்பு போன்ற பிரச்சனைகள் குறைகின்றன
9 மாதங்களில் மூச்சு பிரச்சனைகளும், இருமல் போன்ற தொந்தரவுகளும் நீங்குகிறது
1 வருடத்தில் இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது
5 வருடங்களில் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைந்து போகிறது. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் குறிப்பிட்தகுந்த அளவு குறைந்து போகிறது

ஆகவே என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் நன்மைகளையும், என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும் கருத்தில் இருத்தி என்னை விட்டுவிட முயற்சி செய்யுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே! by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *