என்னை விட்டு விட இரண்டு வழிகள் உண்டு.

1. ஒரேடியாய் நிறுத்திவிடுவது (Cold Turkey)

2. படிப்படியாய் அளவை குறைத்து, கடைசியில் நிறுத்திவிடுவது. (Tapering)

அறிவியல் பூர்வமாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில், என்னை விட்டுவிட ஒரேடியாய் நிறுத்தி விடுவதே மிகச் சிறந்த முறை என கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏனென்றால், என்னை படிப்படியாக விட முயற்சி செய்தால், மிக விரைவில் தோல்வி அடைந்து விட வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு தெரியுமா? உலகிலேயே மிக அதிக அடிமைப்படுத்தும் சக்தி கொண்ட வேதிப்பொருட்களுள் ஒன்றான நிக்கோட்டின் என்னுள் உள்ளது. அதனால் நீங்கள் எவ்வளவு பெரிய ‘அப்பாடக்கராக’ இருந்தாலும், என்னை பயன்படுத்த தொடங்கிவிட்டால், அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு சென்றுவிட மாட்டேன். நானே சென்றுவிட வேண்டும் என நினைத்தாலும், என்னில் உள்ள நிக்கோட்டின் உங்களை விடுவதில்லை.

ஆகவே ஒரேடியாக நிறுத்தும் வழி முறைகளை இப்போது சொல்லித்தருகிறேன்.

என்னை அடிக்க, நாலு டி (4D) எனும் உளவியல் கோட்பாட்டை பயன்படுத்துங்கள். அவை முதல் D Delay, இரண்டாவது D Distract, மூன்றாவது D Drink Water மற்றும் நான்காவது D Deep Breath.

என்னை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் எண்ணத்தை 5 முதல் 10 நிமிடங்கள் வரை தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்டவுடன், உங்கள் சிந்தனை முழுவதும் அதைப்பற்றியே இருக்கும். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த எண்ணம் மறைந்து விடும். ஒரு சின்ன குழந்தை சாக்லேட் கேட்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அம்மா வாங்கி கொடுக்க மாட்டேன் என்கிறார். குழந்தை என்ன செய்யும்? தன்னால் முடிந்த வரை அடம் பிடித்து பார்க்கும், கொஞ்சி பார்க்கும், கெஞ்சி பார்க்கும், வீரிட்டு அழும், சத்தம் போடும். எதற்கும் அம்மா மசியவில்லை எனில் கடைசியில் ‘டயர்ட்’-ஆகி விட்டுவிடும் அல்லது தூங்கி விடும். அதே போல் தான் நமது எண்ணங்களும். தள்ளிப்போட தள்ளிப்போட எண்ணங்களின் வலு குறைந்து விடும்.

மேலும், அந்த எண்ணத்திற்கு அவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்து சிந்திப்பதை தவிருங்கள். 15 வது மாடியிலிருந்து கீழே எட்டி பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். சாதாரணமாக உங்களுக்கு என்ன தோன்றும்? விழுந்துவிடுவோமோ என்றுதானே, ஆனால் அந்த எண்ணத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா? இல்லைதானே! அதே போல் என்னை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் அதனை கண்டுகொள்ளாதது போல், நடிக்க தொடங்குங்கள். நாளடைவில் நடிப்பு நிஜம் ஆகி விடும். கண்டுகொள்ளாமல் தள்ளிப்போடுவதே முதல் D.

இரண்டாவது D என்பது Distract-கவனத்தை திசை திருப்பி வேறு எண்ணங்களில் செலுத்துங்கள். உங்கள் ஃபோனில் ரேடியோ அல்லது பாட்டு கேட்கலாம். யாராவது ஒருவருக்கு ஃபோன் செய்து பேசலாம், அந்த இடத்திலிருந்து வெளியேறி கொஞ்ச தூரம் நடந்து செல்லலாம். இதைத்தான் செய்ய வேண்டுமென்று இல்லை. உங்கள் கவனத்தை திசை திருப்பும் எதையும் செய்யலாம். இவ்வாறு 10 நிமிடங்களுக்கு உங்கள் கவனத்தை திசை திருப்ப முடிந்தால், என்னை பற்றிய எண்ணம் தானாக மறைந்து விடும்.

மூன்றாவது D Drink Water மற்றும் நான்காவது D Deep Breath. என்னைப் பற்றிய எண்ணம் வந்தவுடன் ‘மெதுவாக’, ‘விழிப்புணர்வுடன்’ தண்ணீர் குடிக்க வேண்டும். ஆகவே எப்போதும் தண்ணீரை அருகிலேயோ அல்லது கைப்பையிலோ வைத்திருக்க வேண்டும். எப்போதுமே அரை லிட்டர் அல்லது கால் லிட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, உங்கள் கைப்பையில், மேஜையில், பேண்ட் பாக்கெட்டில், உங்கள் கைகளுக்கு எட்டும் படி வைத்துக்கொள்ளுங்கள். எங்காவது வெளியில் போகிறீர்கள் என்றால், பாட்டிலை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்ளுங்கள். தண்ணீர் தீரத் தீர மீண்டும் நிரப்பி கொண்டே இருங்கள்.

மெதுவாக, பொறுமையாக, அடக்காமல் 8 முதல் 10 முறை மூச்சை மெதுவாக மூக்கின் வழியாக இழுத்து, மெதுவாக வாயின் வழியாக விடுவதும் நல்ல பலனை தரும். மூச்சை உள்ளே இழுக்கும் போது, நுரையீரலின் அடிப்பகுதி நன்றாக காற்றால் நிரப்பப்பட்டு, உதரவிதானத்தை தட்டி, வயிறு வெளியில் வரும். மூச்சை வெளியே விடும்போது, வயிறு உள்ளே போகும். இவ்வாறு சரியாக உங்கள் சுவாசம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இவற்றை செய்வதால், என்னை பயன்படுத்த வேண்டும் என்ற ‘பசி’ இல்லாது போகும். இவற்றை பயன்படுத்தி பலர் என்னிடமிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். ஆகவே என்னை அடித்து துரத்த வேண்டுமானால் இந்த ‘நாலு டி’ – க்களை பயன்படுத்துங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book