5 நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல!

என்னாலும், என் சகோதரர்களாலும் ஒரு நாளைக்குச் சராசரியாக 2500 பேர் கொல்லப்படுகிறார்கள் என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது இல்லையா? அப்படியானால், என் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் 2500 சரிந்து போகிறது. அது போகப் புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்கள் எனச் சொல்லி அரசு முடிந்த இடங்களிலெல்லாம் என் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கிறது. இது போதாது என்று பல தொண்டு நிறுவனங்கள் வேறு வரிந்து கட்டிக்கொண்டு வந்து விட்டன. இவற்றையெல்லாம் சமாளித்து எப்படி லாபம் கொழிக்கும் பன்னாட்டு பணக்கார நிறுவனங்களாகவே என் நிறுவனங்களை வைக்க முடியும் என ஆராய்ச்சிகள் பல செய்து, அதனை பல ‘வல்லுநர்கள்’ விவாதித்து, பின்வரும் விஷயங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1. திரைப்படங்களில், கதையின் கதாபாத்திரங்கள், குறிப்பாக ஹீரோக்கள் என்னை பயன்படுத்துவது போல் காண்பித்து அதன் மூலம் இளைஞர்களிடம் என்னை பயன்படுத்துவது என்பது ‘பெண்களுக்குப் பிடித்தது’, ‘இளமையின் சின்னம்’ என்பது போன்ற மாயத் தோற்றத்தை என் நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

உண்மையில் என்னை பயன்படுத்தினால், தமிழ் நாட்டுப் பெண்கள் உங்கள் அருகில் கூட வரத் தயங்குவார்கள். அப்புறம் எப்படிக் காதலித்து, கல்யாணம் பண்ணிக்கொள்வது? மேலும் என்னை பயன்படுத்துபவர்கள் பலரும் இளமை வயதிலேயே முதுமைத் தோற்றம் பெறுகிறார்கள். ஆனால் திரைப்படங்களில் காண்பிப்பது எல்லாம் இதற்கு நேர்மாறானது!

நன்றாக உற்றுக் கவனித்தீர்களானால், தேவையே இல்லாமல், பல காட்சிகளில் என்னை பிடிப்பது போன்ற காட்சிகள் திணிக்கப்பட்டிருக்கும். பல திரைப்படங்களில் உங்கள் ஆதர்சன ஹீரோக்கள் என்னை பயன்படுத்துவதை அடிக்கடி பார்ப்பதன் மூலம், உங்களை அறியாமல் உங்கள் ஆழ்மனதிற்குச் சென்று என்னை நீங்கள் விரும்பத் தொடங்கி விடுவீர்கள்.

என்னை இப்படி அடிக்கடி திரைப்படங்களில் காண்பிப்பதன் மூலம், என்னை பயன்படுத்துவது என்பது சமுதாயத்தில் உள்ள பரவலான அங்கீகரிக்கப்பட்ட பழக்கம் என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி உங்களைப் போன்ற பல அப்பாவிகளை என் வலையில் என் நிறுவனங்கள் விழவைக்கின்றன.

இப்போதெல்லாம் மாப்பிள்ளை பார்க்கும் பெண் வீட்டார் “ஸ்மோக் பண்றதெல்லாம் இப்போ பெரிய விஷயமே இல்லை, அதுக்கெல்லாம் மாப்பிள்ளைய ரிஜெக்ட் பண்ணா மாப்பிள்ளையே கிடைக்காது” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அப்படியானால், என் நிறுவனங்கள் ஜெயித்துவிட்டன! பாவம்! என்னை பிடிப்பவர்கள் தோற்றுவிட்டார்கள்!

2. இந்தியப் பெண்கள், தாராளமான (!) இந்திய ஆண்கள் அளவுக்கு என்னை பயன்படுத்துவதில்லை என்பது என் நிறுவனங்கள் செய்த ஆராய்ச்சிகளில் தெரிய வந்தது. அப்படியானால், பெண்களை என்னை பரவலாகப் பயன்படுத்த வைத்தால் என் நிறுவனங்களின் வாடிக்கையாளர் இழப்பை சரிகட்டலாம், வியாபாரமும் பன்மடங்கு உயரும், இன்னும் பணக்கார நிறுவனங்கள் ஆகலாம் என்று என் நிறுவனங்களுக்கு புரிந்தது.

ஆகவே பெண்களைக் கவர, எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும் என் புது அவதாரமான ‘ஸ்லிம் சிகெரெட்டை’ அறிமுகப்படுனார்கள். மேலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் இந்தச் சமுதாயத்தில் உயர்ந்திருக்கிறார்கள் என்று நிரூபிக்க என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

என் நிறுவனங்கள் செய்த பல ஆராய்ச்சிகளில் எடையைக் கட்டுக்குள் வைக்க நான் பயன்படுகிறேன் எனப் பெண்களும், ஆண்களும் சொல்லியிருக்கிறார்கள். உண்மைதான்! ஆனால் எப்படி நான் எடையைக் கட்டுக்குள் வைக்கிறேன் என்று தெரியாமல் உயிரையும், உடலையும் என்னிடம் அடமானம் வைக்கிறார்கள்.

என்னை பயன்படுத்துவதால், ஏற்கனவே சொன்னது போல், பசி ஏற்படாத ஒரு மந்த நிலையைத் தற்காலிகமாக ஏற்படுத்துகிறேன். பசியை உணரச் செய்யும் அறிவை என் போதையால் செயலிழக்கச் செய்கிறேன். அதன் விளைவாக ஓரளவுக்குச் செயல்படத் தேவையான உணவைக் கூட உட்கொள்ளாமல், முறையான ஊட்டச்சத்து பெறாமல், பல ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்களுக்கு உள்ளாகி உடல் நலத்தை இழக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நீடித்த சோர்வு ஏற்பட்டுச் செயல்திறன் குறைந்து போகிறது. இறுதியில் என்னால் ஈவு இரக்கமற்றுக் கொல்லவும் படுகிறார்கள்.

இப்படித்தான் என்னை பயன்படுத்துபவர்களின் எடை ‘கட்டுக்குள்(!)’ இருக்கிறது. எடையைக் கட்டுக்குள் வைக்க வேறு எவ்வளவோ நல்ல வழிகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் விட்டு விட்டு என்னை வந்து பிடித்துக் கொண்டால், நானும் உங்களை இறுகப் பிடித்துக் கொண்டு இறக்க வைத்து விடுவேன். பார்த்துக்கொள்ளுங்கள்!

3. மேலும் என்னை பெரும்பாலோனோர் பயன்படுத்தத் தொடங்குவது பதின்பருவம் என்று அழைக்கப்படும் 11 வயது முதல் 19 வயதில்தான் என்று என் நிறுவனங்கள் செய்த ஆராய்ச்சியின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆகவே அவர்களைக் கவரும் வகையில் தரமான நோட்டுப்புத்தகம், பிஸ்கட், ச்சிப்ஸ், நூடுல்ஸ் போன்றவற்றின் மூலம் என் நிறுவனங்ளை அறிமுகப்படுத்தி அவர்களை எங்கள் வலையில் விழ வைக்கிறார்கள்.

4. அதே போல் பெண்களைக் கவர, அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களான சோப்பு, சிகப்பழகு க்ரீம், ஷாம்பு போன்ற பொருட்களைத் தயாரித்து அவற்றை விளம்பரப்படுத்ததி, என் நிறுவனங்கள் விளம்பரம் தேடிக்கொள்கின்றன.

அந்த விளம்பரங்கள் மூலம், இவ்வாறு பல தரமான பொருட்களைத் தயாரிக்கும் என் நிறுவனத்தின் தயாரிப்பான நானும் நல்லவன், தரமானவன், எந்த நோயையும் ஏற்படுத்த மாட்டேன் என்று பெண்களும், பதின்பருவத்தினரும் நம்ப வைக்கப்படுகிறார்கள்.

5. என்னை விளம்பரப்படுத்துவது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற உண்மை அறியாத வணிகர்களைப் பயன்படுத்தி, என் நிறுவனங்கள் என்னை விளம்பரப்படுத்தி வருகின்றன. என்னை அதிகமாக விற்றால் கமிஷன் தருவது, அலங்காரப் பொருட்கள் தருவது, என்னை வண்ண மயமாக காண்பிக்கச் செய்வது, என்னுடைய விளம்பரப் பலகையில் அவர்களின் கடைப்பெயரை அச்சிட்டு தருவது, போஸ்டர்கள் தருவது போன்ற பல்வேறு வியாபார உத்திகளைக் கையாண்டு என் விற்பனையை அமோகமாக நடக்கச்செய்கிறார்கள். விளம்பரப் பலகையில் மிகச் சிறியதாக கடைப்பெயரை எழுதி, மிகப் பெரியாதாக என் பிராண்ட் (Brand) பெயர்களை எழுதி வைத்து எனக்கு விளம்பரம் தர, கரண்ட் பில்லை வணிகர்கள் தலையில் கட்டுகிறார்கள்.

இப்போது தெரிகிறதா? எந்த அளவுக்கு நீங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்படுகிறீர்கள் என்று! இன்னுமும் என்னை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டிருந்தீர்களானால், உங்களை என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! இப்படி சொல்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை நீங்கள் இப்படி பயன்படுத்திக் கொண்டே இருந்தால், உங்கள் உடல் உறுப்புகளை பாதிப்படையச் செய்து உங்கள் வாழ்க்கைத்தரத்தை குறைப்பத்தை தவிர எனக்கு வேறு வழியில்லை. உங்கள் ஜீன்கள் நோய்களுக்கு ஏற்றாற்போல் இருந்தால், சிலப் பல நோய்களை வர வழைத்து உங்களை கொல்லவும் என்னால் முடியும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே! by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *