நான் என்ன உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. என்னை பார்த்துப் பல உலக நாடுகளே பயப்படுகின்றன. உலகின் பல நாடுகளிலுள்ள பல லட்சம் பேருடன் நான் “செத்து செத்து விளையாடுவோமா?” என்று மிகப் பணிவுடன் கேட்டுக்கொண்டு சாகடித்துக் கொண்டிருக்கிறேன்.

பல நாடுகளின் அரசுகள் என்னால் வரும் வரும் லாபத்தை விட, பல மடங்கு பணத்தை என்னால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காகச் செலவழித்து நஷ்டம் அடைகின்றன. இந்தக் கேவலமான நிலையைப் பொருளாதாரத் தற்கொலை என்று வல்லுநர்கள் வர்ணிக்கிறார்கள்.

என்னை என்ன செய்வது என தெரியாமல் பல நாடுகள் விழிபிதுங்கிக் கொண்டிருப்பதால், உலக நாடுகள் பல உலகச் சுகாதார நிறுவனத்தில் என்னைப் பற்றி விவாதித்துப் புகையிலை கட்டுப்பாட்டிற்கான சட்டப்பூர்வமான ஒப்பந்தம் (Framework Convention for Tobacco Control) ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறார்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் பொதுச் சுகாதாரத்திற்காகவே, உலக நாடுகள் இணைந்து சட்டப்பூர்வமாகக் கொண்டு வந்திருக்கும் முதல் ஒப்பந்தமாம் இது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன் ஷரத்துக்களைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இந்தச் சட்டப்பூர்வமான ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள் 1996 ஆம் ஆண்டு தொடங்கி, உலகச் சுகாதார நிறுவன அவையில் 2003 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு உலக நாடுகளின் கையெழுத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டதாம். 2005 ஆம் ஆண்டு 40 நாடுகள் கையெழுத்திட்டதால், இந்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வந்து விட்டதாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.

2011 ஆண்டின் புள்ளி விவரப்படி, இந்த ஒப்பந்தத்தில் 172 உலக நாடுகள் கையெழுத்து இட்டு இருக்கின்றனவாம். உங்களது இந்திய நாடு 2004 ஆண்டிலேயே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விட்டதாம்.

மானாவாரியாக மக்களைக் கொல்லும் என்னையும், என் சகோதரர்களான மெல்லும் வகை புகையிலை பொருட்கள், பீடி, மூக்குப்பொடி போன்றோரைக் கட்டுப்படுத்த இந்திய அரசு என்ன செய்கிறது என்று பலரும் கேள்வி கேட்கிறார்களாம். என்னை முழுவதுமாகத் தடை செய்து விட வேண்டியது தானே என்றும் சொல்கிறார்களாம். அப்படியெல்லாம் நினைத்த பொழுதில் எங்களை ஒழித்துவிட முடியாது.

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் எங்களைப்பற்றி? பின்வரும் அட்டவணை நானும் என் சகோதரர்களும் எந்த அளவுக்கு பவர் ஃபுல்லான ஆட்கள் என்பதை காட்டுகிறது. பாருங்கள்!

*2009-ம் ஆண்டு புள்ளி விபரப்படி, இந்தியாவில் இருக்கும்

நிர்ணய அளவீடு

சதவீதத்தினர்

110 கோடி மக்கள் தொகை என்று கொண்டால்

15 வயதிற்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 35% பேர் எனக்கும், என் சகோதரர்களுக்கும் வாடிக்கையாளர்கள் 38 கோடியே 50 லட்சம் பேர்
எனக்கும் என் சகோதரர்களுக்கும் வாடிக்கையாளர்களான 38 கோடியே 50 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 75% பேர் என்னையும், என் சகோதரர்களையும் தினமும் பயன்படுத்துகிறார்கள். 28 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் பேர்
என்னையும் என் சகோதரர்களையும், பயன்படுத்தும் 28 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் பேரில் கிட்டத்தட்ட 60% பேர் காலையில் எழுந்த முதல் 30 நிமிடங்களுக்குள் என்னையோ அல்லது என் சகோதரர்களையோ பயன்படுத்தி விடுகிறார்களாம். அப்படியானால் அவர்கள் எனக்கு அடிமைகள் 17 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

*- GATS (Global Adult Tobacco Survey- India)

ஆக இவ்வளவு எங்களை பயன்படுத்துபவர்களாகவும், தினசரி வாடிக்கையாளர்களாகவும், முழு அடிமைகளாகவும் இருந்தால், என்னையும், என் சகோதரர்களையும் எப்படி முழுமையாக தடை செய்ய முடியும்?!

வேண்டுமானால் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலம் புதிதாய் யாரும் எங்களைப் பயன்படுத்தத் தொடங்காமல் இருக்க வைக்கலாம். அதைத்தான் உங்கள் அரசு செய்ய முடியும். அதன் ஒரு பகுதியாக உலகச் சுகாதார நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட படி, 2020 ஆண்டுக்குள் உங்கள் இந்தியா தனது புகையிலை பயிரிடும் பரப்பளவில் 30% குறைத்துக் கொள்வதாக உறுதி கூறியுள்ளதாம். ஒவ்வொரு வருடமும் என் பிராண்டுகளின் குறிப்பிடத்தகுந்த அளவில் விலை ஏற்றம் செய்து என்னைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கிறார்களாம்.

மேலும் எங்களைக் கட்டுப்படுத்தக் கட்டுப்பாடு சட்டத்தை (Cigarette and Other Tobacco Products Act – COTPA) 2003 ஆம் ஆண்டு கொண்டு வந்திருக்கிறதாமே! உங்களுக்குத் தெரியுமா?. கோட்பா 2003-படி, எங்களை ஊடகங்களிலும், விளம்பரப் பலகைகள், போஸ்டர்கள் போன்றவற்றின் மூலமாகவும் விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாம்.

எங்களின் அட்டைப்பெட்டியில் மீது “புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்” என்ற எச்சரிக்கை வாசகமும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளின் கோரமான, பயமுறுத்தும் படங்களும் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாம்.

கடைகளில் எங்களை மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் வெளியில் வைக்கவோ, தொங்க விடவோ கூடாதாம். பற்ற வைக்கத் தீக்குச்சி, தீப்பட்டி, லைட்டர், மண்ணெய் விளக்கு போன்றவற்றை வைக்கக்கூடாதாம்.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் எங்களை வாங்கவோ விற்கவோ கூடாதாம். இது பற்றி வாசகம் எழுதப்பட்டுப் பலகைகள் தொங்க வைக்கப்பட்டு இருக்க வேண்டுமாம்.

புகைபிடிப்பதால், அருகில் இருப்பவர்களுக்கும் புற்றுநோய் போன்ற பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் என்ற அறிவியல் உண்மையைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகைபிடிப்பதும், புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாம். மீறினால் பயன்படுத்தியவருக்கும், அந்த இடத்தின் பொறுப்பாளருக்கும் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படுமாம்.

இவ்வாறு கடுமையான சட்டங்கள் இருந்தும், என்னையும், என் சகோதரர்களையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு இருக்கும் மிக முக்கிய காரணங்கள் இரண்டு.

முதல் காரணம், என்னைக் கட்டுப்படுத்த சட்டங்கள் போட்டவர்களால், அதை முழுவதுமாக அமல்படுத்த முடியாமல் போய் விட்டது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? எனக்கும் என் சகோதரர்களுக்கும் அடிமையானவர்கள் என்ன கொஞ்சம் நஞ்சமா? கிட்டத்தட்ட 17 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் பேர்! இத்தனை பேரைச் சமாளிக்க வேண்டுமானால், இதற்காக மத்திய அரசிலும், மாநில அரசிலும் ஒரு தனித் துறையையே உருவாக்க வேண்டியிருக்கும். உங்களின் உடல், மன நலன் மீது உங்களுக்கே அக்கறை இல்லையெனில், அரசு என்ன செய்ய முடியும்? உங்கள் மக்களாட்சியில் அரசு என்பது உங்களுடையது. மக்களாகிய உங்களில் பெரும்பான்மையோர் என்னை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைத்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினால், அரசு என்னை தடை செய்ய ஏதாவது செய்யலாம்.

“திட்டம் போட்டுத் திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது

அத சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.”

இந்தப் பாட்டில் சொல்லியுள்ளது போல் என்னை பயன்படுத்தும் 38 கோடியே சொச்சம் பேர் தாங்களாக என்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே இந்தச் சட்டங்கள் உண்மையில் அமலுக்கு வரும். நீங்கள் எல்லோரும் என்னையும், என் சகோதரர்களையும் வாங்க மாட்டோம் என்று சொல்லுங்கள். எங்கள் கம்பெனிகள் எங்களை உற்பத்தி செய்வதை நிறுத்திக்கொள்வார்கள். வியாபாரம் ஆகும் மற்ற பொருட்களை உற்பத்தி செய்ய போய் விடுவார்கள். நீங்கள் என்னை விட மாட்டேன் என்கிறீர்கள். அவர்கள் அதை வைத்து கல்லாக்கட்டுகிறார்கள். நானும் பலரை எனக்கு தொடர்ந்து அடிமையாகிக் கொண்டே இருக்கிறேன், வருத்தப்பட்டுக் கொண்டே அவர்களை கொன்று குவித்துகொண்டே இருக்கிறேன்.

இரண்டாவது காரணம், என் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்வதற்காகப் புதுப் புது யுக்திகளைக் கையாண்டு வருவது. அவை என்னென்னவென்று இப்போது சொல்கிறேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book