21 சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை

டீ/காஃபி அருந்தியவுடன், என்னை பயன்படுத்துகிறீர்கள் என்றால், டீக்கடைக்கு செல்லாதீர்கள். வேண்டுமானால் வீட்டிலேயே டீ/காஃபி போட்டு ஃபிளாஸ்கில் எடுத்துக்கொண்டு போய் விடுங்கள். அல்லது முழுமையாக என்னை நிறுத்தும் வரை, டீ/காஃபி சாப்பிடுவதையும் நிறுத்தி வையுங்கள். முடிந்தால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்படியே விட்டுவிடுங்கள். ஏனெனில் டீ/காஃபி ஆகியவை கூட உங்களை அடிமைப்படுத்தும் சக்தி கொண்டவையே!

என் பயன்பாட்டை திடீரென நிறுத்துவதால், உங்கள் உயிருக்கு எந்த பாதகமும் வராது. கொஞ்சம் தலை வலிக்கலாம். எரிச்சல் ஏற்படலாம். வேறு சில பிரச்சனைகள் வரலாம். என்னால் ஏற்படும் பற்பல நோய்கள் வந்து நீங்கள் அவஸ்தை படுவதை விட இந்த பிரச்சனைகள் எவ்வளவோ மேல்! ஆகவே பொறுத்துக்கொள்ளுங்கள். எல்லாம் அதிகபட்சம் சில வாரங்கள்தான், அதற்குள் உங்கள் உடல் புதிய விஷயங்களுக்கு பழக்கப்பட்டு விடும். பொறுக்கவே முடியவில்லை எனில், ஒரு பொது மருத்துவரைப் பார்த்து, நிலைமையை விளக்கி, உடலில் இருக்கும் பிரச்சனைகளுக்கு/அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

சாப்பாடு சாப்பிட்டவுடன், ‘கொள்ளிக்கட்டையான’ என்னை பிடித்தால்தான், ஜீரணம் ஆகும் என்று உங்களுக்கு தோன்றினால், ஜீரணமாக இரண்டு வாழைப்பழங்களை சாப்பாடு சாப்பிட்டவுடன் சாப்பிடுங்கள்.

கழிவறையில் என்னை பயன்படுத்தினால்தான், மலம் கழிக்க முடியும் என்று இருந்தால், காலையில் எழுந்த உடன் 2 டம்ளர் இளஞ்சூடான தண்ணீரை குடித்துவிட்டு இங்கும் அங்கும் உங்கள் வீட்டிற்குள்ளேயே கொஞ்ச நேரம் இங்குமங்கும் நடங்கள். அல்லது முந்தின நாள் இரவு 2 வாழைப்பழங்களோ அல்லது நார்ச்சத்து உள்ள காய்கறிகளையோ, கீரைகளையோ சாப்பிடுங்கள். அப்படியும் முடியாது என்றால், பொது மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மலமிளக்கி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுங்கள்.

என்னைப் பயன்படுத்தியே பழக்கப்பட்டிருப்பதால், வாயில் நான் இல்லாதது உங்களுக்கு ‘ஒரு மாதிரியாக’ இருக்கலாம். அப்படி தோன்றும் போது கேரட், வெள்ளரிக்காய், முள்ளங்கி போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ரெடியாக வைத்திருந்து வாயில் போட்டுக்கொள்ளுங்கள். இல்லையெனில் கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை வாயில் வைத்துக்கொள்ளுங்கள் அல்லது சீரகம், சோம்பு, கோதுமை போன்றவற்றையும் மடித்து வைத்துக்கொண்டு, அவ்வபோது வாயில் போட்டு மென்று வாருங்கள்.

எந்தெந்த இடங்களுடன், பொருட்களுடன், நபர்களுடன் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேனோ அவற்றையெல்லாம், அவர்களையெல்லாம் தவிர்த்து விடுங்கள். அவர்கள் உங்கள் உயிர் நண்பர்கள் என்று சொன்னீர்களானால், நான் சொல்வேன் – “இல்லவே இல்லை”. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை எனில், தன் உயிரைக்கொடுத்து காப்பாற்றுபவனே உயிர் நண்பன் – உண்மை நண்பன். என்னைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தும் நண்பர்கள் உங்கள் உயிரை எடுக்கப்பார்க்கிறார்கள். ஆகவே அவர்கள் உயிர்ப் பகைவர்கள். அவர்கள் என்னைப் பயன்படுத்தும் போது, குற்ற உணர்வில்லாமல் இருக்க, அவர்களைச் சுற்றி உள்ள உங்களையும் பயன்படுத்தக் கற்றுக்கொடுத்து பாழுங்கிணற்றான என்னில் அவர்கள் விழுந்தது போதாது என உங்களையும் தள்ளி விட்டுவிட்டார்கள். ஆகவே உங்களின் உண்மையான உயிர் நண்பர்கள் யாரென்றால், யார் உங்களை என்னிடமிருந்து மீட்டெடுக்க உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான்! உங்கள் நண்பர் வட்டத்தை சீர் செய்து கொள்ள, நண்பர்கள் என்ற பெயரில் இருக்கும் உயிர்ப் பகைவர்களை இனம் கண்டு கொள்ள, என்னை விட்டொழிக்க நீங்கள் முயற்சிக்கும் தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்னொரு புறம் பார்த்தால், அவர்களும் உயிர் நண்பர்கள் என்ற பெயரில் பலரின் வலைகளில் விழுந்து சிக்கிச் சின்னாப்பின்னம் ஆனவர்கள். என்னால் ஏற்படும் விளைவுகளை அறியாது, தான் சிக்கிக்கொண்டது போதாது என உங்களையும் என்னிடம் சிக்க வைத்துவிட்டார்கள்.

நீங்கள் என்னை விட்டொழித்தபின், ஓர் உண்மையான உயிரான நண்பனாய் நீங்கள் அவர்களுக்கு, என்னை விட்டுவிட உதவி செய்யப் போகலாம். அது வரை அவர்களை விட்டு முழுவதுமாக விலகி இருத்தல் அவசியம். எப்படி அவர்களை விட்டு விலகி இருக்க போகிறீர்கள் என்று நீங்கள்தான் திட்டம் போட வேண்டும். நேரடியாக சொல்லிப் பிரியலாம். வேண்டுமென்றே ஏதாவது ஒரு உப்பு பெறாத விஷயத்திற்கு ஒரு சண்டை போட்டு பிரியலாம். காரணமே சொல்லாமல் திடீரென விலகி விடலாம். உங்கள் பகைவர் கூட்டம் இல்லை இல்லை உங்கள் உயிர் நண்பர் கூட்டம் எப்படி என்று உங்களுக்கு தெரியுமில்லையா! உங்கள் நண்பர் அல்லது பகைவர் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல் சரியான திட்டம் தீட்டி அவர்களிடமிருந்து விலகி வந்து விடுங்கள்.

அவர்களை நீங்கள் செல்லும் வழியில் என்னை பயன்படுத்தும் நபர்கள் இருக்கும் இடம் அல்லது நீங்கள் வழக்கமாக என்னை வாங்கும் கடை இருக்கிறது என்றால், வேறு ஒரு வழியில் வந்து செல்லுங்கள். இதில் ஒரு விஷயம் இருக்கிறது. நீங்கள் எந்த வழியில் போனாலும், அந்த வழியில் ஏதாவது என்னை விற்கும் கடை இருக்கும். யாராவது ஒருவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் நிச்சயம் பார்ப்பீர்கள். நீங்கள் என்னை விட்டுவிட வேண்டும் என்று உறுதியாக நினைத்திருந்தால் மட்டுமே, இப்படிப்பட்ட விஷயங்களை காட்டி உங்களை என்னால் மயக்க முடியாது. ஒரு வேளை என்னைப் பயன்படுத்தும் மிச்சச் சொச்ச ஆசைகளை நீங்கள் வைத்திருந்தீர்களானால், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

என் ஒன்று விட்ட அண்ணனான மதுவை நீங்கள் பயன்படுத்தும் போது என்னை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவனை அறவே பயன்படுத்தாதீர்கள். நான் ஒரு சைக்கோ கொலைகாரன் என்றால் அவன் ஒன்றும் எனக்கு சளைத்தவன் அல்ல. அவனையும் விட்டொழிக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக, என்னை விட்டொழிக்கும் முயற்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அவனைப் பற்றி பேச வேண்டுமானால், தனியாக ஒரு புத்தகம்தான் எழுத வேண்டும். அவனைப் பற்றி நீங்கள் விவரமாக தெரிந்து கொள்ள நான் எழுதியுள்ளது போல் ஒரு புத்தகம் எழுதச் சொல்லி ஒரு வேண்டுகோளை அவனிடம் உங்கள் சார்பாக சொல்லி வைக்கிறேன்.

இப்போது சொன்னவையெல்லாம் என்னை பயன்படுத்துவதை நிறுத்த பொதுவாக இருக்கும் பிரச்சனைகளுக்கான பொதுவான ஆலோசனைகளே! உங்களுக்கு இவற்றில் எவை ஒத்துவரும் என்று எனக்கு தெரியாது. ஆகவே நீங்களே உங்கள் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து, உங்களுக்கு ஒத்துவரும் ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு செயல்படுத்தி பாருங்கள். பிற்சேர்க்கை-3ல் கொடுக்கப்பட்டிருக்கும் இணையதளங்களில் இருக்கும் வழிமுறைகளை படித்து அவற்றையும் செயல்படுத்தி பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *