19 சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை

பிரச்சனைகளை சமாளிக்க, அவற்றிலிருந்து ஒரு விடுதலை பெற, அவற்றை தீர்க்க என்னை பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். “உண்மையிலேயே பிரச்சனைகள் சமாளிக்கப்பட்டனவா? நீங்கள் விடுதலை பெற்றீர்களா? அவை தீர்க்கப்பட்டனவா?” என்று கேட்டால், நிச்சயம் இல்லை. இல்லவே இல்லை!

பிரச்சனைகளிலிருந்து ‘எஸ்கேப்’ ஆக என்னை பயன்படுத்துகிறீர்கள். அதுவும் என்னை பயன்படுத்தும் நேரத்தில் தற்காலிகமாக எஸ்கேப் ஆகிறீர்கள், என்னை பயன்படுத்தி முடித்தவுடன் மீண்டும் பிரச்சனைகளை சந்திக்கத்தானே வேண்டும். அவ்வாறு சந்திக்காமல், தொடர்ந்து என்னை பயன்படுத்துவதன் மூலம் எஸ்கேப் ஆகிக்கொண்டே இருந்தால், பிரச்சனைகள் தானாக சரியாகிப் போய் விடுமா என்ன? இல்லை தானே?

அப்படியானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பிரச்சனைகளை நல்ல முறையில் எதிர்கொள்ள, சமாளிக்க, தீர்க்க பழக வேண்டும். இல்லையெனில் பிரச்சனைகள் உங்களின் வாழ்க்கைத்தரத்தை குறைத்துவிடும். பிரச்சனைகள் பற்றி கவலைப்படுவது முட்டாள்தனம். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்!

“கவலைப்படாதீர்கள் என்று சொல்கிறேன், எல்லாம் தானாக சரியாகி விடும் என்பதற்காக அல்ல! கவலைப்படுவதால் ஒரு பயனும் இல்லை என்பதால்!”

உண்மையில் உங்களுக்கு தேவை, பிரச்சனைகளை தீர்ப்பது பற்றி சிந்திக்க ஓர் அமைதியான மனநிலை. அந்த அமைதியான மனநிலையை பெற பலர் என்னை பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். நீங்கள் உடனடி மன அமைதி பெற ஓர் எளிய பயிற்சியான “ஜேக்கப்சன் ரிலாக்ஸ்சேஷன் (Jacobson’s Relaxation) பயிற்சியை’ கற்றுத்தருகிறேன். தொடர்ந்து இதனை பயிற்சி செய்து வந்தீர்களானால், பதற்றம், கோபம் போன்ற குணங்கள் உங்களை அண்டவே அண்டாது. நீங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வரலாம்.

குறிப்பு: இதனை ஓர் உளவியல் ஆலோசகரிடம் நேரடியாக கற்றுத் தேர்வதே சிறந்தது. மனச்சிதைவு நோய், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், இந்த பயிற்சியை மருத்துவரின் சம்மதம் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *