6 கடவுள் கொஞ்சம்! மிருகம் அதிகம்!!

உங்களுக்குப் போதை தரும் என்னுள் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு ரூபாய் சாக்லேட்டில் கூட என்ன வேதிப்பொருட்கள் இருக்கிறது எனப் போட்டிருக்கிறார்கள் ஆனால் சராசரியாக ஐந்து ரூபாய் விலை உள்ள என் உட்பொருட்களை என் நிறுவனங்கள் போடமாட்டார்கள். ஏனெனில் அது தெரிந்தால், நான் ஒரு விஷப்பொருள் என்று மக்களுக்கு தெரிந்துவிடுமே! யாருமே பயன்படுத்தமாட்டார்களே!

நீங்கள் என்னை விட வேண்டுமென்று நினைத்திருப்பதால், இப்போது சொல்கிறேன், என் உட்பொருட்கள் என்னென்னவென்று! கேட்டுவிட்டு என்னை விட்டுவிடுங்கள்.

என்னுள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கிட்டத்தட்ட 4000 நச்சுப்பொருட்களும், கிட்டத்தட்ட 56 கார்சினோஜன் எனப்படும் புற்றுநோய் உருவாக்கும் வேதிப்பொருட்களும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெகுநாட்கள் கெடாமல், வெகு தூரம் பயணம் செய்யவும், பூச்சிகளால் அரிக்கப்படாமல் இருக்க வேண்டியும் பல பூச்சிக்கொல்லிகளும், விஷப்பொருட்களும், அதிக வெப்ப நிலையில் குப்-என பற்றி எரியாமல் இருக்க என்னுள் தார்-ம் என்னுள் சேர்க்கப்படுகிறது. ஆமாம்! ரோடு போடப் பயன்படும் கருப்பு நிறமான தார்! இன்னும் பல பல காரணங்களுக்காகப் பற்பல வேதிப்பொருட்கள் என்னுள் சேர்க்கப்படுகின்றன. மேலும் எரிக்கப்படும் போது பலவிதமான வேதிமாற்றங்கள் ஏற்பட்டு, அதன் காரணமாக பல்வேறு நச்சு பொருட்கள் உருவாகின்றன. என்னுள் இருக்கும், எரிக்கும் போது உண்டாகும் பின்வரும் வேதிப்பொருட்கள் ஒரு சாம்பிள்தான். பாருங்கள் அவை பொதுவாக எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று.

வேதிப்பொருள்

பொதுவான இவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன

நிக்கோட்டின் பூச்சிக்கொல்லி
கெரசால் தொழிற்சாலை பிளாஸ்டிக்குகளுக்கும், ஓட்டவைக்கும் பொருட்களின் முக்கிய உட்பொருள்
பைரின் ரோடு போடப் பயன்படுத்தப்படும் தார்-ன் முக்கிய உட்பொருள்
டி.டி.டி (DDT) களைக்கொல்லி
கார்பன் மோனோ ஆக்ஸைடு வாகனங்களின் புகையிலிருந்து வெளிவரும் வாயு
அம்மோனியா டாய்லட் சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படுவது
ஹைட்ரஜன் சையனைட் தடைசெய்யப்பட்ட கொடிய விஷம்
அசிட்டோன் நகப்பூச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனம்
மெத்தனால் ராக்கெட்டிற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது
ஃபார்மால்டிஹைட் பிணத்தை அழுகாமல் வைக்கும் திரவம்
பியூட்டேன் சிகரெட்டைப் பற்ற வைக்கும் லைட்டரின் திரவம்
நாஃப்தலீன் அந்துருண்டை என அழைக்கப்படும் பூச்சி விரட்டி
ஆர்சனிக் எலிகளைக் கொல்லப் பயன்படும் விஷம்
காட்மியம் பாட்டெரிகளில் பயன்படுத்தப்படுவது
டொலூவீன் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கரைப்பான்
பென்சீன் டை(Dye)களிலும், செயற்கை இரப்பர் செய்யவும் பயன்படுத்தப்படுவது
லெட் (காரீயம்) பெட்ரோலிய எண்ணெயில் உள்ள விஷம்

இவ்வளவு நச்சுப்பொருட்கள் கொண்ட என்னை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நீங்கள் நினைத்தாலே என்னை எளிதில் விட்டு விடுவீர்கள். என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டதால் புற்றுநோயோ அல்லது இருதய நோயோ அல்லது பக்கவாதமோ எற்பட்டு பாதிக்கபட்ட பின் “உன்னிடம் தெரியாமல் மாட்டிக் கொண்டேன்” என்று சொன்னால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட தவறு செய்த பின்பு “தெரியாமல் செய்து விட்டேன்” என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அந்தக் குழந்தை, குறிப்பிட்ட தவறின் விளைவுகளை தெரியாமல், அறியாமையில் செய்து இருக்க வேண்டும். ஆனால் வயது வந்தவர்கள் அனைவருக்கும் என்னை பயன்படுத்துவது தவறு என்று தெரிந்திருந்தும், அதன் விளைவுகளை அறியாது இல்லை இல்லை உணராது அறியாமையில் வீழ்ந்து கிடப்பது தான் இங்கு பிரச்சனையே! சரி விடுங்கள்! போனது போகட்டும்!

நீங்கள் என்னை வெல்ல தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால், இவற்றப்பற்றி மேலதிக தகவல் தந்து உங்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்காமல், என்னை விட்டுவிட என்ன செய்ய வேண்டுமென்று அடுத்ததாக சொல்லப்போகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *