23 எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்!

என்னை வெற்றிகரமாக விட்டவர்களும், என்னை விட போராடிக்கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களும், ஆதரவுக் குழுக்கள் என்ற பெயரில் சந்தித்துப் பேசுகிறார்கள். என்னை வென்றவர்கள் அவர்களின் வெற்றிக் கதையைச் சொல்லும் போது, உங்களுக்கும் என்னை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். மேலும் என்னை வெல்வதில், உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது, அவர்கள் உங்களை சரியாக புரிந்து கொண்டு உரிய வழிமுறைகளை சொல்வார்கள். அப்படிப்பட்ட ஆதரவுக் குழுக்களின் விபரங்கள் பிற்சேர்க்கை 4-ல் கொடுக்கப்பட்டுள்ளன. அங்குச் செல்ல முடியுமா என்று பாருங்கள். இல்லையெனில் நீங்களே ஒரு ஆதரவுக் குழுவை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் நட்பு/உறவு வட்டத்தில், நிறைய பேர் என்னை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவரின் பெயரையும், ஒரு பேப்பரில் எழுதுங்கள். அவர்களில் பலர் என்னை விட்டுவிட நினைத்துக் கொண்டிருக்கலாம், முயற்சி செய்து கொண்டிருக்கலாம்.

ஆகவே அவர்கள் அனைவரையும் எஸ்.எம்.எஸ்/ இ-மெயில் / ஃபேஸ் புக்/ ஃபோன் மூலமோ நேரில் சென்று பார்த்தோ, நீங்களும் விட முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்க வாரம் ஒரு முறை சந்தித்துப் பேசலாம் என்று சொல்லுங்கள். நிச்சயம் சிலராவது முன்வருவார்கள். அவர்களை உங்களுடன் சேர்த்துக் கொண்டு என்னை ஒரு குழுவாக அடித்து துவம்சம் செய்யுங்கள். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுதலங்களில் உங்கள் ஆதரவுக்குழுக்களுக்கு நிச்சயம் இடம் தருவார்கள். இல்லையெனில் யாராவது ஒருவர் வீட்டின் மொட்டை மாடியிலோ, பீச், பார்க், மைதானம் போன்ற பொது இடங்களிலோ கூட சந்தித்து பேசமுடியும் அல்லவா! உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டால் நிச்சயம் வழிபிறக்கும்.

என்னை விட்டுவிட்ட ஒரிருவருடனுமோ அல்லது என்னை வெல்ல போராடிக்கொண்டிருக்கும் சகபோராளிகளுடனோ எப்போதும் தொடர்பில் இருங்கள். அவர்களுடன் தினமும் ஒரு முறையாவது நேரிலோ, ஃபோனிலோ என்னை வெல்வது பற்றி பேசி வாருங்கள்.

ஆதரவு குழுவில் பங்கேற்பது, நீங்கள் என்னைப் பயன்படுத்தும் அளவை நிச்சயம் குறைக்கும். என்னை வென்றுகாட்டவும், உங்களை அடுத்தடுத்த நடத்தை மாற்ற நிலைக்கு கொண்டு செல்லவும் பயனுள்ளதாய் இருக்கும். மிக விரைவில் என்னை முழுவதுமாய் விட்டுவிட இவை உங்களுக்கு நிச்சயம் உதவி புரியும். இங்குதான் உங்களின் உயிர் காக்கும் உயிர் நண்பர்களை உங்களால் பார்க்க முடியும்.

இந்த முயற்சியில் தோல்வி ஏற்பட்டால், சோர்ந்து விடாதீர்கள். “அது போன வாரம், இது இந்த வாரம்”, “அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சாதரணமப்பா!” என்று தட்டி விட்டுக்கொண்டு, மீண்டும் உங்கள் விடா முயற்சியைத் தொடருங்கள். மீண்டும் சரியாகத் திட்டமிட்டு, தகுந்த முன்னேற்பாடுகள் செய்து என்னை வெல்லுங்கள். நீங்கள் என்னை விட்டுவிட முயற்சி செய்தீர்கள் என்பதற்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்.

என்னை விட்டொழிப்பதில் அவ்வபோது தோல்வி ஏற்படுவது பலருக்கும் நடப்பதே. அப்படி தோல்வி ஏற்படுவதற்கு காரணம் என்னுள் உள்ள நிக்கோட்டினே, நிச்சயமாக நீங்கள் இல்லை! முன்னரே நான் சொன்னது போல், உலகத்திலேயே மிக அதிகமாக அடிமைப்படுத்தும் சக்தி கொண்டுள்ள இரசாயனங்களுள் ஒன்று நிக்கோட்டின். ஆகவே உங்கள் தோல்வி என்பது நீங்கள் ஏற்கனவே எடுத்து இருக்கும் முயற்சிகளுடன் சேர்த்து இன்னும் கொஞ்சம் நீங்கள் முயற்சியுடன் போராட வேண்டும் என்பதையே காட்டுகிறது, எனவே மனம் தளாராதீர்கள்! உங்கள் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருங்கள், என்னை வெல்லும் வரை அல்லது நான் உங்களை கொல்லும் வரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *