15 உலகத்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்!

என்னை பயன்படுத்துவது பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம், என்னால் ஏற்படப்போகும் தீய விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என நினைத்துப் பாருங்கள். நீங்களே, உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, உங்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதை உங்கள் மனக்கண் முன் நிறுத்தி பாருங்கள். இவ்வாறு கற்பனை செய்ய பயப்படாதீர்கள். “நீர் என்ற சொல் சிந்தி விடுமா?, நெருப்பு என்ற சொல் என்ன சுட்டுவிடுமா?” சும்மா செய்து பாருங்கள். இவ்வாறு செய்து அவ்வபோது பார்ப்பது உங்கள் ஆழ்மனதில் பதிந்து என்னை வெல்ல பெரிய அளவில் உதவும் என உளவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றனவாம்.

ஓர் எடுத்துக்காட்டுக்கு, என்னை லவ் பண்ண ஒருவரின் உண்மைக் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த லவ்வர் அரசுத்துறையில் ஒரு நல்ல பதவியில் இருந்து, நேர்மையாக பணியாற்றி, சென்ற ஆண்டுதான் ஓய்வு பெற்றார். அன்பான மனைவி. அறிவான ஒரு மகன், அழகான ஒரு மகள் என நல்ல குடும்பம் இல்லை இல்லை பல்கலைக்கழகம் அவருடையது. மகனை சென்னையின் ஓர் உயர்ந்த பொறியியல் கல்லூரியில் சேர்த்திருந்தார். மகளுக்கு திருமணம் செய்ய வரன் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் திடீரென நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட, சென்னை மாநகரின் ஒரு சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் போது, அவரின் மனைவி நிறைய நகைகள் அணிந்திருந்தார். சிகிச்சை செய்ய செய்ய அவரின் ஒவ்வொரு நகையும் குறைந்து கொண்டே போய் கடைசியில் தாலிச் செயின் மட்டுமே மிஞ்சியது. எப்படியாவது அவரை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அவர் மனைவி தன் மகனின் மேல் படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையும், மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையும் செலவழித்து, அவரின் உடலை பரிசோதனை சாலையாக்கினார்கள்.

கடைசியில் அவரது தாலிச் செயினும் பறிபோனது, அதாவது அவர் இறந்து போனார். அவர் அத்தனை வருடமாக சேர்த்து வைத்த எல்லாவற்றையும் “ஸ்வாஹா” செய்து விட்டேன், அவரையும் சேர்த்து! இப்போது அவரின் குடும்பத்தை பார்த்தால், எனக்கே பரிதாபமாய் இருக்கிறது. என்ன செய்வது, நான் எச்சரிக்கைகள் பல முன்னரே கொடுத்துப் பார்த்து விட்டேன். கேட்கவில்லை என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

சரி அவரை விடுங்கள்! உங்கள் பிரச்சனைக்கு வருவோம். இவருக்கு நிகழ்ந்தது போல உங்களுக்கு நிகழ்ந்து விடாது, ஏனெனில் நீங்கள்தான் என்னை விட்டுவிட போகிறீர்களே! அப்படித்தானே?

நீங்கள் என்னைப் பயன்படுத்துவதால் என்ன கெட்ட விஷயங்கள் நடக்கின்றன, என்னை விட்டுவிட்டால் என்ன நல்ல விஷயங்கள் நடக்கும் என ஏற்கனவே எழுதியிருக்கிறீர்கள் அல்லவா? அவற்றை எடுத்து பார்த்து, “ நீங்கள் என்னை ஏன் பயன்படுத்தக்கூடாது?” என்று பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் அந்த பட்டியலில் “என்னை பயன்படுத்துவதால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள/ஏற்பட வாய்ப்பு இருக்கும் உடலில், மனதில், குடும்பத்தில், வேலையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?” என்று தொடர்ந்து எழுதி அந்த பட்டியலை பெரிதாக்கி கொண்டே வாருங்கள்.

நிறுத்துதலால் உந்தப்பட்ட உபாதைகள் எனப்படும், என்னை நிறுத்தியவுடன் உடல் மனத் தொல்லைகள் எல்லாம் இங்கு மேற்கூறிய வழிமுறைகளை செய்து வந்தாலே படிப்படியாக குறைந்துவிடும். என்னை முழுவதுமாக விட்டுவிட்ட 2, 3 நாட்களுக்கு மிக அதிகமாக இருக்கலாம். அவற்றையெல்லாம் பல்லைக்கடித்துக் கொண்டு தாங்கிவிட்டீர்களானால், அதற்கு பிறகு நீங்கள் அந்த தொல்லைகள் பற்றி கவலைப்படத் தேவையே இல்லை. நிக்கோட்டின் இல்லாமல் இருக்க உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்மாக பழகிக்கொள்ளும். அதன் காரணமாக அந்த தொல்லைகள் படிப்படியாய் குறைந்து ஒரு நாளில் நீங்கள் எந்த தொல்லைகளும் இல்லாது மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

ஒரு வேளை அந்த தொல்லைகளை உங்களால் தாங்க முடியாமல் கூட போகலாம். அப்படி நடந்தால், உடல் தன்னை நிக்கோட்டின் இல்லாமல் இருக்க, மிகக் கடுமையாக தயார்படுத்திக் கொண்டிருக்கிறது எனப் பொருள். அந்த நிலையில் என்னை திரும்பவும் நாடி என்னிடம் மீண்டும் அடிமையாகாது, 2 மில்லி கிராம் அளவுள்ள நிக்கோட்டின் ச்சூயிங் கம்மை எடுத்துக் கொள்ளலாம். அது பற்றி அடுத்த அத்யாயத்தில் விரிவாக விளக்கி உள்ளேன். மேலும் உடனடியாக அருகிலுள்ள உளவியல் ஆலோசகரை/மன நல மருத்துவரை/பல் மருத்துவரை/பொது மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் உங்களிடம் குறைகாணாது உங்களுக்கு உரிய ஆலோசனையும், தேவைப்பட்டால் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகளும் அளிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *